பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவரது நடைப்பயிற்சியும், வறுமையும் வீடு மாறியதாலும், இருபது ரூபாய் அவரது சம்பள உயர்வினாலும் விடை பெற்றன. புதிய வீட்டில் ஒரு கயிற்றுக் கட்டிலில் அவரின் கால்கள் அனாதையாக வெளியே நீண்டிருக்கும் ஆஜானுபாகுவான உடல் சற்று மெலிந்து விட்ட போதும், உயரம் என்னவோ குறைவதாக இல்லை. உட்கார்ந்து, உட்கார்ந்து குழி விழுந்த கட்டிலில் நாளிதழை இட்டு நிரப்புவார்.

என் தந்தை ஒரு மண்ணின் மைந்தர். மிகச் சிறந்த விவசாயியும் கூட! மண்வெட்டி அவரது உடலை உரமேற்றியிருந்தது. ஆதித்யனின் சூடு ஆரோக்கியத்தை முழுமையாக்கியிருந்தது. ஆஜானுபாகுவான உடலும், நல்ல உயரமும், சாட்டை போன்ற கரங்களும், செவ்வரியோடிய விழிகளுமாக .

அவர் இந்த அன்னை பூமியை நேசித்திருந்தால், அவரின் அயராத உழைப்பு எங்கள் அனைவரது பசியையும் போக்கியிருக்கும். தையல் இயந்திரத்தில் வேகமும், லாவகமுமாக இயங்கிய கைகள், தொடர்ந்து அதையே செய்திருந்தால் குறைந்த பட்சம் இல்லை என்ற சொல்லே எங்கள் வாழ்வில் இல்லாமல் போயிருக்கும் !

அதுவும் வேண்டாம். கலை நயத்தோடு ரசனை சொட்டச் சொட்ட, எங்களை மயக்கிய கவிதைகள், பட்டி மன்றங்களிலோ, அரசியல் மேடைகளிலோ முழங்கியிருந்தால், புகழோடும், பொலிவோடும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்போம். ஆனால் ஐயகோ! "பிழைக்கத் தெரியாதவன்தான் பேனாவைப் பிடிப்பான்", என்று பேசும் இந்தச் சமுதாயம், அவரைப் பிழைக்க விடாமல் விரட்டியடித்ததே!

1959-ல் பத்திரிக்கையாளர் சட்டம் அமலுக்கு வந்தது. பூருப் ரீடரின் வேலைக்கு,ரூபாய் 150 என்ற இலக்கை அரசு நிர்ணயித்தது. ஆனால் அப்பாவுக்குப் படிப்பில்லை எனக் கூறிச்சம்பள உயர்வு மறுக்கப்பட்டது.நியாயமற்ற இம்முடிவால் இருநூற்று ஐம்பது ரூபாய் வருமானத்திற்கும் அப்பா முற்றுப்புள்ளி வைத்தார்.

52