பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு. ஜி.கே.எஸ் அவர்கள் எதுவும் செய்ய மாட்டார். நீங்கள் போகலாம்" என விரட்டினார். என்றாலும் நான் என் முயற்சியைக் கைவிடவில்லை. என் வேண்டுகோள் திரு. ஜி.கே.எஸ் அவர்களிடம் சென்றடைந்த மறுநாளே அந்த மேலாளர் வெட்கமுறும்படியும் நான் வியப்படையும் படியும் செய்தி வந்தது. அப்பாவை ஆபீசில் வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி... நானோ... மகிழ்வின் உச்சியில்... ஏனெனில் ஏமாற்றங்களே வாழ்வு என்றான பிறகு முதன் முதலாகக் கிடைத்த வெற்றியல்லவா...ஒடினேன்... அப்பாவிடம்! ஒரே கல்லில் வீழ்த்திய மாம்பழத்தை ஆனந்தமாகச் சுவைக்கும் சிறுவனைப் போல...

" அப்பா உங்கள் புத்தகம் வெளி வந்து விட்டது போலத்தான்... நாளை நீங்கள் வந்து பணத்தைப் பெற்றுக் கொண்டதும், வேலையைத் தொடங்கி விடலாம்" என்றேன் உற்சாகமாக...

அவரோ மெளனமாக குறுக்கும் நெடுக்கும் நடக்கலானார்... சற்றுப் பொறுத்து, "என்னால் இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது அம்மா" என்றாரே பார்க்கலாம்!

" என்ன ! என்னப்பா சொல்கிறீர்கள்? பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாதா!" என்றேன் பதட்டத்தோடு...

"ஆம் அம்மா புத்தகத்துக்காகப் பணம் கொடுப்பது என்றால் அதை எழுதியவர் யார்? அந்தப் புத்தகம் மக்களுக்குப் பயன்படுவதற்காகவா? அல்லது வெறும் பணம் பண்ணுவதற்காகவா? என்றெல்லாம் ஏதும் அறியாமல் என்னையும் பார்க்காமல் கொடுக்கும் பணத்தை நான் எப்படியம்மா பெற்றுக் கொள்வது?"

அடக்கடவுளே! கொடுப்பது என்பதே மறந்து போய்விட்ட கால கட்டத்தில், கொடுத்தும் இப்படி ஒரு இடையூறா? என்று என் விதியை நொந்தபடி, அப்பா புத்தகம் வெளியிட உதவிட வேண்டும் என்று தானே கேட்டேன். கேட்டதும் உதவிய அந்தப் பெருந்தன்மையும் உயர்வும் இப்படி மறுக்கப்படுவதால், அர்த்தமற்றதாகி விடாதா? " என்றேன்.

54