பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

11


முதலியாராகும். 1914இல் ஜெர்மனியின் படையெடுப்பு— முதலாவது உலகப்போர் தொடங்கிய நிலையில் அப்பரமசிவ முதலியாரே இப்போது வந்து பிறந்தார் எனக் கருதி, அப்பெயரோடு பிறந்த ஆனந்த ஆண்டினையும் சேர்த்து. பரமசிவானந்தம் எனவே அப்பிள்ளைக்குப் பெயரிட்டனர். கிராமங்களில் குழந்தை பிறந்ததும் சாதகம் கணித்தல் மரபு. அப்படியே பிறந்த மூன்றாம் நாளில் இக்குழந்தையின் சாதகத்தைக் கணித்த அவ்வூர் வள்ளுவ முதுமகன் இக்குழந்தை, ஊரில் வயல் வேலை செய்யாது— உத்தியோகத்திலே, அதிலும் நன்றாக எழுதும் நிலையில் இருக்கும் என்று அன்று குறிப்பிட்டாராம். எனவே அந்தப் பழைய பரமசிவ முதலியாரைப் போன்று இந்தக் குழந்தையும் சிறப்பான் எனப் பெற்றோர் எண்ணினார்கள். வள்ளியம்மாளுக்கும் பிறகு வேறு மகப்பேறு இல்லை. எனவே ஒரே மகனை நன்கு போற்றி வளர்த்தார்.

வள்ளியம்மாளின் தாயார் கன்னியம்மாள் 1915இலும் தந்தை மாணிக்க முதலியார் 1919இலும் மறைந்தனர். அது வரை ஒன்றியிருந்த குடும்பம் சிலர் இடைபுகுந்து விளையாட, இரண்டுபட்டது. உடன் பிறந்த சகோதரிகள் இருவரும் தனித்தனிக் குடித்தனம் அமைத்தனர். அவர்கள் பெரிய தந்தையார் கந்தசாமி முதலியார் அவர்கள் மகப்பேறு இன்றி விட்டுச் சென்ற வீடும், நிலபுலன்களும் பெரியவராகிய மீனாட்சி அம்மையாருக்கு உரிமையாக, தந்தை மாணிக்க முதலியார் உடைமைக்கு வள்ளியம்மாள் உரிமையாளரானார்.

இருவரும் பக்கத்துப் பக்கத்து வீட்டிலேயே இருந்த போதிலும் அடுத்த பத்து ஆண்டுகளில் அவர்கள் இணைந்து வாழவே இல்லை. பின் 1928இல் முத்தியப்பர் மறைந்த பிறகு இரு குடும்பங்களும் இணைந்தன—என்றாலும் வாழ்வும் வீடும் வேறாகவே இருந்தன.