பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

வள்ளியம்மாள் கல்வி அறம்



வள்ளிம்மாளுடன் அவர் மகனுக்காகக் காமாட்சி அம்மாளும் அவர்களுடன் இருந்தார். கணவர் சற்றே நிலை மாறி, அக்காலத்தில் தேவர்களின் அடியவர்களாயிருந்தவர் பால் சார்ந்த காரணத்தால் வள்ளியம்மாள் குடும்பத்தில் அமைதி இல்லை, என்றாலும் தன் ஒரே மகனை எப்படியாவது நன்கு வளர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளின் அடிப்படையில் தம் இல்லற வாழ்வினைச் சில காலம் விடுத்து நிற்க வேண்டிய நிலை உண்டாயிற்று. தன்மகன் வாழ்வே தன் வாழ்வு எனக் கொண்ட அம்மையார் தாம் பல துன்பங்கள் உற்றபோதிலும் பெற்ற மகனைப் பேணி வளர்ப்பதில் கருத்திருத்தினார். உடன் காமாட்சி அம்மையாரும் உற்றுழி உதவினார்கள்.

ஒரே மகனாக இருந்தாலும் அவன் தவறு செய்தால் தண்டிக்கத் தவற மாட்டார்கள். உடலில் சூடுவைத்தலாகிய பெருந்தண்டனை வரையில் அவர்கள் தந்துள்ளார்கள். எப்படியாயினும் தன் மகன் தக்கானாய் வளரவேண்டும் என்ற குறிக்கோளிலேயே அவனை அடித்தும் அணைத்தும் அதட்டியும் திட்டியும், ஆணையும் அன்பும் குழைத்துக் காட்டியும் வளர்த்தார்கள். தந்தையாரும் இறந்து வேறு தாங்கி உதவத்தக்கவரும் இல்லா நிலையில் அன்னை வள்ளியம்மையார் அவர்களே தம் மகனுக்கு ஐந்து பெருங்குரவராக இருந்து வளர்த்து ஆளாக்கினார்கள். இதை அவர் தம் மகனார்— நம் நிறுவனர்-பாடிய வெள்ளம் விடு தூதில் விளக்கி எழுதியுள்ளார்.

அம்பலவன் தங்கும் அழகார் திருக்கோயில்
இம்பருல கென்ன எதிர்காண்பாய் —செம்பவள

மேனியனார் கோயிலின்பின் மேஷமென தில்லிருந்து
தானினைந்து நிற்குமெந்தன் தாயானாள்—தூநினைவால்

எந்தன் சுகம்காண இன்பம் அடைந்திடுவாள்
துன்பம் அகற்றி எனைச் சோபிப்பாள்— அன்புளத்தில்