பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

வள்ளியம்மாள் கல்வி அறம்


மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ரா. பி. சேதுப்பிள்ளை, கோவை. இராமச்சந்திரம் செட்டியார், புரிசை முருகேசமுதலியார், சுந்தரமூர்த்தி ஓதுவார் ஆகியோர் இருந்தனர். அன்று காலை முதல் இரவு ஒன்பது வரை சடங்குகளுக்குப் பின் விரிவுரைகள், சொற்பொழிவுகள், தேவார இசை போன்றவை தொடர்ந்து நடைபெற்றன. இருநூற்றுக்கு மேற்பட்ட புலவர் பெருமக்கள் அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அத்தகைய பெரியவர்கள் திரு.வி.க. உட்பட நல்லவர்கள் அன்று கலந்து கொண்டமையே இன்று அவர்கள் பெயரால் அறநிலையம் அமைத்துத் தொண்டாற்ற முடிகின்றது என்று அவர் தம் மகனார்— நம் நிறுவனர் அடிக்கடி சொல்லுவார். ஆம்! அது அவ்வளவும் உண்மையாகி—இன்று வள்ளியம்மை கல்வி அறம் வெள்ளிவிழா கொண்டாடிச் சிறக்கிறது.

இவரது அருங்குணங்கள் சிலவற்றையும் இங்கே குறித்தல் வேண்டும். ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை உடையவர். அவ்வூர் அம்பலவாணர் திருக்கோயிலுக்கு அவர்தம் தந்தையார், பெரிய தந்தையார் போன்று மண்டபம் அமைத்தல், மானியம் அளித்தல் ஆகிய சிறப்புக்களை இவரும் இவர் தமக்கையாரும் செய்துள்ளனர். (இவர் தம் தந்தையாரும் பெரிய தந்தையாரும் தங்கள் சொத்துக்களை மூன்றாகப் பிரித்து ஒன்றை அம்பலவாணர் கோயிலுக்கும் மற்றைய இரு பகுதிகளை இரு பெண்களுக்கும் தந்தனர்). இவர் சுற்றம் தழுவும் பண்பினர். விருந்தோம்பலில் சளைக்காதவர். பிறர் பொருளைச் சிறிதும் விரும்பாதவர். அதே வேளையில் தம் பொருளை யாருக்கும் தவறான வழியில் விட்டுக் கொடுக்காதவர். தவறு கண்டவிடத்தே யாவராயினும் தண்டிக்கும் தன்மையர். நலம் கண்டவிடத்தே போற்றிப் பாராட்டுபவர். எல்லாருக்கும் நல்லவராக வாழ முயற்சிசெய்தவர், ஊரில் உள்ள அனைவரும் அக்காலத்தின்