பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

17


அவர் தம் பண்புகளைப் பாராட்டியதோடு அவர் தம் செயல் திறனையும் ஆட்சித் தன்மையினையும் போற்றிப் புகழ்ந்தனர் என அறிய முடிகின்றது.

1941 இல் வள்ளியம்மாள் மறைந்த அந்த ஆண்டிலேயே (அக்டோபர்) பெரிய அன்னையாரும் மறைய, உற்ற துணை நின்ற இருவரும் நீங்கிய நிலையில் உலைவுற்ற மகனார் இரு ஆண்டுகள் பணி ஏற்காது ஓய்வுற்றிருந்தார். பின் 1944 இல் சென்னைப் பச்சையப்பரில்பணிஏற்று 1976 இல்ஓய்வு பெற்றார். அதற்கு முன்பே 1968இல் இக்கல்வி அறத்தினைத் தொடங்கி, தன் வாழ்வின் ஊதியம் அனைத்தையும் அளித்து வளர்த்தார். அன்னையார் தந்த ஊர் நிலங்கள் பலவற்றை விற்று அறத்துக்கெனக் கட்டடங்கள் அமைத்தார். தம் நூல்கள் விற்பனை அனைத்தையும் அறத்துக்கு உரிமையாக்கினார். அவர்தம் பிள்ளைகள் அனைவரையும் இக்கல்விப் பணியில் ஈடுபடச் செய்தார். நல்லவர் வாழ்த்தினர்—உதவினர்— உயர உற்றுழி ஆவன கண்டனர். இறையருளும் அன்னையின் உடன் உறை ஆசியும் கலந்து நிற்க அந்த வள்ளியம்மாள் கல்வி அறத்தின் வெள்ளிவிழா இன்று நடைபெறுகின்றது.

அதன் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஆக்கத்துக்கு அகன்ற உயர்நிலைக்கும் குழந்தைகள் வகுப்பு முதல் (L K.G.) முதுநிலைவரையில் (Post Graduate) வளரப் பல முறையிலும் எல்லா வகையாலும் இணைந்து, இயைந்து, உடலால் உற்றுழி உழைததும் உளத்தால் வாழ்த்தியும் இக்கல்வி அறத்தினை வளர்த்து வாழவைத்த அனைவருக்கும் நன்றி.

வாழ்க வள்ளியம்மாளின் புகழ்!
வளர்க கல்வி அறத்தின் தொண்டு!


இவ்வரலாற்றினை எழுதியவர் : (வள்ளியம்மாள மேநிலைப் பள்ளி முதல்வர் திருமதி, சண்பகம் அவர்கள்.)