பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா ஐந்தாம் நாள் (ஞாயிறு)
14-3-93— பட்டமளிப்புவிழா


14-3-93 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வருமான வரித்துறைத் தலைவர், உயர்திரு வி. எம். சிவசுப்பிரமணியம் அவர்கள் ஆற்றிய உரை,



மாண்புமிகு தொழில்துறை இணை அமைச்சர் அவர்களே! வள்ளியம்மை கல்வி அறத்தின் நிறுவனர், ஐயா, அ. மு. பரமசிவானந்தம் அவர்களே! மற்றும் இங்குக் கூடியுள்ள தாய்மார்களே! மாணவ, மாணவியர்களே அனைவருக்கும் முதற்கண் என்னுடைய பணிவான வணக்கம். நான் வடஇந்தியாவில் பணிபுரிந்த காரணத்தால் அதிகமாகத் தமிழில் எனக்குப் பேசத் தெரியாது. எனவே எனக்குத் தெரிந்த ஓரிரு கருத்துக்களை மட்டும் உங்களுக்கு எடுத்துக் கூற முற்படுகின்றேன். இன்று ஏறக்குறைய நூறு மாணவிகள் பட்டம் பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இருக்கின்றார்கள். அவர்களுக்குக் கருத்துரையும், நல்லுரையும் வழங்கப் பெரியோர்கள் உள்ளனர். எனினும் எனக்குத் தெரிந்த அறிவுரைகளைக் கூற விரும்புகின்றேன்.

இன்று நாம் செய்தித்தாளைப் பிரித்துப் பார்த்தோமானால், இந்தியா, அயர்லாந்து, லெபனான் என்று எந்த நாட்டினை எடுத்துக் கொண்டாலும் வன்முறைகள். வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதே வன்முறை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லை என்பதையும் நாம் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன என்று பார்க்கும்போது ஓர் உதாரணத்தை இங்குக் கூற விரும்புகிறேன். 1969 இல் பம்பாய்க்கு வருமானவரி அதிகாரியாகச் சென்ற போது, அங்கு என்னுடைய சிறுவன் முதல் வகுப்பில் சேர்ந்தான், அங்கு, வாரத்திற்கு ஒரு கட்டுரையாக எழுதி