பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
122
 
14

பட்டினத்துறை பல்லவனீச்சுரர்

காவிரிப்பூம் பட்டினம் காவிரியாறு கடலுடன் கலக்கும் இடத்தில் அன்று இருந்தது. இன்று அதன் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டு விட்டது. சங்க காலச் சோழ மன்னர்களுக்குத் தலைநகரமாக விளங்கிய பட்டினம் அது. கடற்கரைத் துறைமுகப்பட்டினம் ஆனதால் அங்கு வியாபாரம் நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கிறது. பிற நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்தவர்கள் வந்திறங்கும் துறைமுகம் அதுதானே. திருமாவளவன் கரிகாலன் காலத்தில் அந்தப் பட்டினத்துத் தெருக்களின் சிறப்பை, கடியலூர் உத்திரங் கண்ணனார் பட்டினப் பாலையில் விரிவாகச் சொல்கிறார்.

நீரின்வந்த நிமிர் பரிப்புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் குடமலைப்பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காளகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெறிய ஈண்டி