பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
180
வேங்கடம் முதல் குமரி வரை
 

மறைத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள். ஆடை அணியாத ஆண் அழகனாகப் பிக்ஷைப் பாத்திரம் ஏந்திப் புறப்பட்டிருக்கிறார் சிவபெருமான். இவரது அழகில் மயங்கி நிறை அழிந்து நிற்கின்றனர் ரிஷி பத்தினிகள், மகா. விஷ்ணுவோ காண்பவரை மயக்கும் மோஹினியாக வந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து நடந்திருக்கிறார்கள் முனிபுங்கவர்கள், (ஆம், அன்று மாறுவேடப் போட்டி என்று ஒன்று நடந்திருந்தால் இவர்கள் இருவருமே முதல் பரிசு, இரண்டாம் பரிசு இரண்டையும் தட்டிக் கொண்டு போயிருப்பார்கள் போலிருக்கிறது!) இப்படி இந்த முனிவர்கள், அவர்களது துணைவியர் கர்வத்தை அடக்கி, அவர்கள் அன்பையும் ஆணவத்தையும் பிச்சையாகப் பெற்று அவர்களை உய்வித்திருக்கிறான் இறைவன் என்பது கதை, நல்ல ரஸமான கதைதான். பிக்ஷாடனரைப் பார்த்த கண் கொண்டே மோகினி அவதாரத்தையும் செப்புச் சிலை வடிவில் அந்த மேடையிலேயே பார்த்துவிட்டு நடக்கலாம்.

இந்த மண்டபத்தைக் கடந்து அடுத்த கட்டுக்குச் சென்றால் அங்குள்ள ஞானசபையிலே கம்பீரமாகக் காட்சி கொடுப்பவர் கஜசம்ஹாரர். ஒரு காலத்தில் யானை வடிவு கொண்ட கஜாசுரன் என்பவன் பிரமனை நோக்கித் தவஞ்செய்து அரிய வரங்களைப் பெற்றுத் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தியிருக்கிறான். தேவர்களும் முனிவர்களும் முறையிட இறைவன் கஜாசுரனுடன் போர் ஏற்று, அவன் உடல் கிழித்து, அந்த யானையின் தோலையே போர்வையாகப் போர்த்துக் கொண்டிருக்கிறார். இங்குள்ள கஜசம்ஹாரர் மூன்று நான்கு அடி உயரத்தில் அற்புதமாக உருவாகியிருக்கிறார். மேலைநாட்டுக் கலை உலகிலே பிரசித்தி பெற்ற ஒன்று லாவக்கூன் என்னும் சிலை. ஒரு தந்தையையும் அவன் மக்கள் இருவரையும் இரண்டு மலைப்பாம்புகள் சுற்றிக் கொள்ள அந்தப் பிடியிலிருந்து மீளத்தந்தையும் மக்களும் திருகிக்கொண்டு தவிப்பதை