பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அர்த்தநாரியை மட்டும் செப்புச்சிலை வடிவில் அமைக்க மறந்துவிட்டிருக்கிறார்கள். இதன் காரணம் யாதோ? திருச்செங்கோட்டு மலையில் உள்ள கோயிலில் அர்த்தநாரி என்னும் மாதிருக்கும் பாதியன், கல்லிலும் செம்பிலுமே உருவாகி இருக்கிறான் என்றால் அது சோழர்களுக்கு மிகவும் பிந்திய காலத்தில்தான். ஆனால் அந்த மாதிருக்கும் பாதியனை, பஞ்சின் மெல்லடியாள் பாகனை அற்புதமான செப்புச்சிலை வடிவில் பார்ப்பது இத்தலத்தில்தான். நல்ல சோழர் காலத்துச் செப்புச் சிலை. நிரம்ப அழகு வாய்ந்த திருஉருவம். அந்தத் திரு உருவின் முன் நின்று,

உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய ஒருவன்,
பெண்ணாகிய பெருமான் மலை
திருமாமணி திகழ,
மண் ஆர்ந்தள அருவித்திரன்
மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை
வழுவாவணம் அறுமே

என்று நாமும் ஞானசம்பந்தரோடு சேர்ந்து பாடினால் நமது வினைகளும் அகலும். ஆதலால் தயாராயிருங்கள் அடுத்த தீபத் திருநாளன்று அண்ணாமலை சென்று தொழ.