பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11. கச்சி ஏகம்பன்

திருநாவலூரிலே பிறந்து, திருவெண்ணெய் நல்லூரிலே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, திருவாரூரிலே பரவையை மணந்து, சம்பிரமமாக வாழ்ந்தவர் சுந்தரர். இவரது வாழ்க்கை மிகவும் ரஸமாக அமைந்த தொன்று.

இவர் வீட்டுச் சாப்பாட்டுக்குக் குண்டையூரில் நெல் பெற்றால், அதைத் திருவாரூர் கொண்டு சேர்க்க இறைவனையே கேட்பார்.

முதுகுன்றத்தில் பணம் கிடைத்தால், அதை அங்குள்ள மணிமுத்தாற்றில் போட்டுவிட்டுத்திருவாரூர்க் கமலாலயத்தில் எடுத்துக் கொடுக்க வேண்டுவார்.

அவிநாசி சென்றால், எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு, அங்கு ஒரு பிள்ளையை முதலை உண்ட செய்தி அறிந்து, கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே! என்று இறைவனுக்கே கட்டளை இடுவார்.

அத்தனை உரிமை அவருக்கு இறைவனிடத்தில், அத்தனையையும் செய்வார், இறைவன் - அட்டியில்லாமல், இந்தத் தம்பிரான் தோழருக்கு. இதற்கெல்லாம் பரிசாக இறைவன் இவரிடம் பெறுவது, ஒவ்வொரு தடவையும் பத்துப் பத்துப் பாட்டே.

இந்தச் சுந்தரர் திருவொற்றியூர் வருகிறார். அங்குள்ள கன்னிப் பெண் சங்கிலியைக் கண்டு காதலிக்கிறார். அவளை மணம் முடித்து வைக்க அங்குள்ள மாணிக்கத் தியாகரை வேண்டுகிறார். அவரும் இணங்குகிறார். சங்கிலிக்குப் பரவை ஞாபகம் வருகிறது. இவர் ஒரு வழி சொல்லிப் பெரு வழி போகிறவராயிற்றே. ஆதலால் தன்னை எக்காலமும் பிரியேன் என்று இறைவன் சன்னதியிலே சத்தியம் செய்து தரச் சொல்லுகிறாள்.