பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

171

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து. ஒவ்வொரு அவதாரத்திலும் அவர் கொண்ட கோலங்கள் பல. அதில் பார்த்தனது சாரதியாய் இருந்து தேரோட்டியது கிருஷ்ணாவதாரத்தில், கிருஷ்ணனுக்கு என்று பல கோயில்கள் இருந்தாலும், பார்த்தசாரதிக் கோலத்துக்கு என்று இருப்பது இக் கோயில் ஒன்றே ஒன்றுதான்.

மேலும் ஒரு விசேஷம் இக்கோயிலில். அரங்கநாதனைக் காணக் கோயில் என்னும் ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும். வேங்கடேசனைப் பார்க்கத் திருமலை என்னும் வேங்கட மலை மேல் ஏற வேணும். வரதராஜனைக் காணப் பெருமாள் கோயில் என்னும் காஞ்சிக்கே போக வேணும், இன்னும் நரசிம்மனைக் காண அஹோபலத்துக்கும், ராமனைக் காண அயோத்திக்கும் போக வேணும்.

ஆனால் அந்தப் பஞ்ச மூர்த்திகளையும் இந்தத் திருவல்லிக்கேணிக் கோயில் ஒன்றிலேயே கண்டு விடலாம். இங்குப் பார்த்தசாரதியைத் தொழச் சென்றால் பஞ்சபாண்டவர்க்காகத் தூது சென்ற பார்த்தசாரதி கோயிலிலே பஞ்ச மூர்த்திகளையும் ஒருங்கே வழிபாடு செய்ய வகை செய்திருக்கிறார்களே, அதுவே ஒரு பெரிய விசேஷம்தானே.

இந்தக் கோயிலைப் படத்தில் பார்த்தாலும் சரி, நேரில் சென்று கண்டாலும் சரி, கோயில் முன்னால் சந்நிதிக்கு நேர், எதிரே இருக்கும் புஷ்கரணியைப் பார்க்காமல் இருக்க முடியாது. அதுவே ஆதியில் அல்லி மலரும் சிறிய கேணியாயிருந்து, பின்னர் விரிந்து பரந்த பெரிய தெப்பக் குளமாக ஆகி இருக்க வேணும். இதனையே கைரவணீ புஷ்கரணி என்று நீட்டி முழக்கிச் சொல்கிறது ஸ்தல புராணம். இந்த புஷ்கரணி தீர்த்தம் கங்கையை விடப் புனிதம் என்று கூறும், தல வரலாறு. இத்திருக்குளத்தில் மீன்களே வசிப்பதில்லை.