பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

17

நாராயணன், வகுளமாலிகையைத் தூதனுப்பி, பத்மாவதியை மணம் பேசித் திருமணம் செய்து கொள்ள முனைகிறார். கல்யாணச் செலவுக்குப் பணம் வேண்டுமே. அதற்காகக் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லக்ஷம் பொன் கடன் வாங்குகிறார். இந்தக் கடனுக்கு வருஷந்தோறும் வட்டி கட்டுவதாகவும், கலியுக முடிவில் அசலைக் கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டு பத்திரம் வேறே எழுதிக் கொடுக்கிறார். கடன் பத்திரத்தில் சங்கரனும், பிரம்மாவும் சாக்ஷிக் கையொப்பம் இடுகின்றனர்,

இப்படிக் கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு கல்யாணம் 'ஜாம் ஜாம்' என்று நடக்கிறது. கடன்தான் இன்னும் அடைத்தபாடாக இல்லை. அதற்காகவே வேங்கடேசன் இன்னும் பக்தர்களிடம் பிரார்த்தனை மூலம் வாங்கிக் கொண்டிருக்கிறார். வட்டிக்கு வட்டி வாங்கும் வட்டிக் காசுப் பெருமாள் என்ற பெயர் வாங்கியும், வட்டியையும் முதலையும் குபேரனுக்குக் கொடுக்காமலேயே 'மொங்கான்' வைக்கிறார் ஆசாமி. ஒரே ஒரு திருப்தி. வருகிற பணம் முழுவதையும் பள்ளிக்கூடம், கலாசாலை, ஆஸ்பத்திரி, அநாதை ஆசிரமம் என்று தானம் வழங்கி விடுகிறார். குபேரனது கடன் தீராவிட்டால், குபேரனுக்கு என்ன குறைந்து விடப் போகிறது?

இந்தப் பெருமாளைப் பற்றி மக்கள் பேசிக் கொள்ளும் கதைகளோ அனந்தம். ஸ்ரீ வேங்கடேசனோ திருமலை மீது நிற்கிறார். அங்கு அவர் பக்கத்திலோ துணைவி இருக்கவில்லை. அந்த அலர்மேல் மங்கையோ மலை அடிவாரத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ள திருச்சானூரில் குடியிருக்கிறாள்.

இப்படி இவர்கள் பிரிந்திருப்பானேன்? அது தெரியாதா? . மணப் பெண்ணான அலர்மேல் மங்கை கணவன் வீட்டுக்கு

வே-கு : 2