பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோதாவரி புஷ்கர தீர்த்தத்தோடும் போட்டியிடும் இச்சங்கு தீர்த்த ஸ்நானம். இச் சங்கு தீர்த்தத்துக்குத் தென் கிழக்கே ஒரு பர்லாங்கு தூரத்தில் ஒரு சிறு கோயில், அங்குக் கோயில் கொண்டிருக்கிறார் ருத்ர கோடீசுவரர், அபிராமி நாயகியுடன். அவுணர்களை எல்லாம் கொலை செய்த பாவத்தைப் போக்கக் கோடி ருத்திரர்கள் இங்கு வந்து வணங்கி, இந்த லிங்கத் திருவுருவைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்பது புராண வரலாறு.

இன்று இத் தலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் வேதகிரியானும் பக்தவத்சலனும் ருத்ரகோடீ ஈசுவரனுமே என்றாலும், அன்று இத்தலத்தில் வேத நாராயணன் கோயில் கொண்டிருந்ததாகவும் வரலாறு உண்டு, இந்த ஊருக்கே வேதநாராயணபுரம் என்று ஒரு பெயர் உண்டே . ஆனால் அந்த வேத நாராயணர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

சைவ வைணவ பேதம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, தன் துணைவியைக் கூடக் கீழே விட்டு விட்டு, வேதகிரியான் தான் கழுகு முனிவர்களுக்கு ஆசி கூற மலை மேலேயே ஏறி நின்று கொண்டிருக்கிறானே. நாமும் கழுகு வேதகிரியனைத் தொழுவதோடேயே திருப்தி யடையலாம். வேதநாராயணனைத் தேடி அலைய வேண்டாம்.