பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

237

கல்வெட்டுகளும் அதனையே கூறுகின்றன, நடுவிலே பிரதானமான கோயில், அதைச் சுற்றிச் சின்னஞ்சிறு கோயில்கள் எழுந்திருக்கின்றன. அக் கைலாசநாதர் கோயிலைத் தவிர, கேதாரீசுவரருக்கும் ஒரு கோயில் உண்டு. அக்கோயில் சுவரில் உள்ள கல்வெட்டுகள் பழைமையானவை. ஆனால் இன்று அதனைப் புதுப்பித்துக் கட்டியிருக்கின்றனர்.

சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டினால், ஒரு கோட்டை இருந்ததாகவும், அதில் யமுனைக் கரையிலிருந்து வந்த விராடராஜன் வசித்ததாகவும் சொல்வார்கள். இக்கோட்டையையே பின்னர் ராஜேந்திர சோழன் கைப்பற்றிக் கொண்டு, இந்த ஊருக்கே ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம் என்று பெயரிட்டிருக்கிறான். அவனே இங்கு வேதம் ஓதுதலுக்கும் ஓதுவித்தலுக்கும் நிபந்தங்கள் ஏற்படுத்தி, நிலங்களைத் தானம் வழங்கியிருக்கிறான்.

இவ்வூருக்கு அழகு தருவது ஊரின் மேற்கேயுள்ள ஏரி. மிகவும் பெரிய ஏர் அது. லோகமகா தேவி குளம் என்று கணக்குகள் கூறும். எந்த லோகமகா தேவி என்று தெரியவில்லை. சோழ மன்னரின் மனைவியரில் எத்தனையோ லோகமகா தேவிகள். அவர்களில் யார் பெயரால் இந்தக் குளம் வெட்டப்பட்டது என்பதை எல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கே விட்டு விடலாம் நாம். சுந்தரவரதனையம் கைலாச நாதரையும் வணங்கிய திருப்தியோடு ஊர் திரும்பலாம். குடவோலைக் கல்வெட்டைத் தாங்கியும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் வைகுண்டப் பெருமானுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரும் வடிக்கலாம்.