பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27. மதுராந்தகத்துக் கருணாகரன்

விச்சக்கரவர்த்தி கம்பன் தமிழ்நாட்டில் பல தலங்களுக்குச் சென்றிருக்கிறான். தொண்டை நாட்டிலுள்ள அந்தப் பிரபலமான கச்சிக்கே சென்றிருக்கிறான். அங்குள்ள ஏகம்பனையே வணங்கியிருக்கிறான். கம்பன் ஏதோ கம்பங் கொல்லையைக் காத்ததினாலாவது, இல்லை! கம்பூன்றி நடந்ததினாலாவதுதான் கம்பன் என்று பெயர் பெற்றான் என்று கூறுவது அறியாமையே.

கோதண்டராமன் கோயில்

தேரழுந்தூரில் வழிவழியாகச் சைவப் பெருங்குடியில் வந்த கம்பனது முன்னோர்களுக்குக் கச்சி ஏகம்பனே வழிபடு தெய்வமாக இருந்திருக்கிறான். ஆனால் ஏகாம்பரன் பெயரையே அவன் தந்தை அவனுக்குச் சூட்டியிருக்கிறார். அதனால்தான் கம்பன் என்ற பெயர் நிலைத்திருக்கிறது. தக்க புகழையுமே பெற்றிருக்கிறது.

இந்தக் கம்பன் தொண்டைநாடு சென்று, கச்சி ஏகம்பனைக் கண்டு தொழுதுவிட்டுத் தன் சொந்த ஊராகிய தேரழுந்தூருக்குத் திரும்பியிருக்கிறான். வருகிற வழியில் ஓர் ஊர். அந்த ஊரில் கோயில் கொண்டிருப்பவன் கோதண்டராமன் என்று அறிந்தபோது, கோயிலுள் சென்று தன்னை ஆட்கொண்ட பெருமானான ராமனை வணங்கித்துதிக்க நினைத்திருக்கிறான்.