பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

வேங்கடம் முதல் குமரி வரை

கொஞ்சம் கூட நினைக்காதவர்களைத் தேடிப் பிடிக்க ஓடுவான். ராமதாஸின் சரித்திரம்தான் தெரியுமே! அல்லும் பகலும் அனவரதமும் துதித்து! பத்ராசலத்தில் கோயில் எடுப்பித்த அந்தக் கோபண்ணாவின் கனவில் கூடத் தோன்றாத அவன், ஹைதராபாத்தில் உள்ள பாதுஷாவான மன்னனை நோக்கி விரைந்திருக்கிறான். அவனுக்குத் தரிசனம் தந்திருக்கிறான். மோகாராக்களாகவே அவன் முன் கொட்டியிருக்கிறான் என்றால் கேட்பானேன், ஆனால் இந்தக் கலெக்டர் பிளேசுக்குத் தரிசனம் தந்தது மிக்க ரசமான கதை.

மதுராந்தகத்து ஏரி பெரிய ஏரிதான் என்றாலும், இந்த ஏரிக்கு ஒரு சாபமோ என்னவோ, வருஷா வருஷம் கரை உடைத்துக் கொள்வது தவறுவது இல்லை. பெரும் பொருள் செலவில் ஏரிக் கரையைப் பழுது பார்ப்பார்கள், இங்குள்ள மராமத்து இலாகா அதிகாரிகள்,

என்றாலும் நல்ல ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடை மழை பெய்து ஏரி நிறைந்து விட்டால், ஒரே கவலைதான். எங்கேயோ ஓர் இடத்தில் பிய்த்துக் கொண்டு கரை உடையும். தண்ணீரெல்லாம் வெளியே ஓடும். வழியிலுள்ள பயிர்களை அழிக்கும். மாடு மனை மக்களையெல்லாம் வாரிக் கொண்டே போய் விடும். ஏரியில் உள்ள தண்ணீர் எல்லாம் இப்படி வந்து விட்டால் பயிர் விளைவதேது? நிலவரி வசூலாவது ஏது? இதனால் எல்லாம் சர்க்காருக்கு ஒரே நஷ்டம். கலெக்டர்களுக்கோ ஓயாத தலைவலி,

1795-1798 வருஷங்களில் செங்கல்பட்டு ஜாகீரில் கலெக்டராக இருந்தவர், கர்னல் லயனல் பிளேஸ் என்ற ஆங்கிலத் துரை. இவருக்கு இந்த மதுராந்தகம் பெரிய ஏரிக் கதை தெரியும். அவர் கலெக்டராக வந்த அந்த வருஷத்திலே (1795இல்) ஏரி உடைப்பு எடுத்து அதனால் மக்களுடன் சர்க்கார் அடைந்த நஷ்டங்களைப் பற்றி. விவரமான குறிப்புகளைப் படித்திருக்கிறார்.