பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வேங்கடம் முதல் குமரி வரை

முடிந்திருக்கிறது. மற்றவை எல்லாம் பழைய கோயிலாகவே இருக்கின்றன, இன்றும். புதுப்பித்த ராமநாதன் செட்டியார், கோயிலுக்கு வெளியே பொன் முகலி ஆற்றுக்குச் செல்லும் படிக்கட்டின் பக்கத்திலே ஒரு சிறு மண்டபத்திலே சிலை உருவில் நின்று கொண்டிருக்கிறார். அவரது பக்திச் சிரத்தையைப் பற்றி எவ்வளவோ சொல்கிறார்கள், மக்கள்.

கோயிலின் பின் புறத்தில் இரண்டு குன்றுகள்; ஒன்றின் பேரிலே கண்ணப்பர் தொழுத குடுமித் தேவர், இன்று கண்ணப்ப ஈசுவரர் என்ற பெயரோடு எழுந்தருளியிருக்கிறார். மற்றொரு குன்றின் பேரிலே துர்க்கை.

இரண்டு கோயில்களுக்கும் செல்வது கொஞ்சம் சிரமம். உயரம் என்பதினால் அல்ல. சரியான பாதை இல்லாத காரணம்தான். கண்ணப்பர் மலை ஏறும் மலைச் சரிவிலே மணிகண்டேசுவரருக்கு ஒரு கோயில். அதை அடுத்து மலையைக் குடைந்து உண்டாக்கிய மண்டபம். இதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர்.

இங்குதான் பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலது காதில் ஓதி அருளினார் என்று கதை, காசி மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியது போல.

இன்றும் மக்களிடத்து ஒரு நம்பிக்கை. அந்திம தசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்துக்குக் கொண்டு வந்து, வலப்பக்கமாக ஒருக்கச் சாய்த்துக் கிடத்தினால், சாகிற பொழுது உடல் திரும்பி, வலது காது வழியாகவே உயிர் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் என்கிறார்கள்.

இந்த மணிகண்டீசுவரர் கோயில் மூன்றாம் குலோத்துங்கன் என்னும் வீர ராஜேந்திர சோழன் கட்டியது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆதலால் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பே, காளத்தியப்பர் கோயில் கட்டப்