பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வேங்கடம் முதல் குமரி வரை

சிற்பச் செல்வம். மண்டபத்தின் முகப்பிலே ஆறு பெரிய கல் தூண்கள். ஒவ்வொரு தூணிலும் குதிரை மீது வரும் வீரர்கள் சிறுத்தை வேட்டையாடும் காட்சி. தூண்களுக்கு மேலே தவழ்ந்து தாழும் போதிகை.

மண்டபத்திலே அடுக்கடுக்காக நாற்பது தூண்கள். பெரிய தூண்கள் இருபத்து நான்கு. உயர்ந்திருக்கும் உள் மண்டபத்திலே பதினாறு தூண்கள். ஒவ்வொரு தூணிலும் மூன்று தளங்கள். தளம் ஒன்றுக்கு நான்கு பட்டைகள், அப்படித் தூண் ஒன்றுக்குப் பன்னிரண்டு சிற்பங்கள்.

கணக்குப் போட்டுத்தான் பாருங்களேன். நானுறுக்கு மேற்பட்ட சிற்ப வடிவங்கள் அல்லவா? மூஞ்சூறு வாகனப் பிள்ளையாரும், மயிலேறும் கோலக் குமரனும் பல நிலைகளில். ஊர்த்துவதாண்டவர், பிக்ஷாடனர், கஜசம்ஹாரர், திரிபுராந்தகர், தக்ஷிணாமூர்த்தி என்று எண்ணரிய திருக்கோலங்களில் சிவபிரான், விஷ்ணுவின் அவதாரத் திரு உருவங்கள், கண்ணன் லீலைக் காட்சிகள், எண்ணற்ற பெண்கள் எழில் நிறைந்த வண்ணங்களில் எல்லாம் அங்கே உருப் பெற்றிருக்கின்றன. தூண்களை விட்டு விதானத்தை நோக்கினால், விரிந்த தாமரை மலர்கள், அந்த மலர்களின் இதழ்களைக் கொத்திக் கொண்டிருக்கும் கிளிகள் எல்லாம் கல்லிலே உருவாயிருக்கின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆங்கில ரஸிகன் ஒருவனும் இக் கலைப் பொருள்களைக் கண்டு கழிபேருவகை எய்தி இருக்கிறான். இந்த மண்டபத்தையும், மண்டபத்தில் உள்ள சிற்பச் செல்வம் அத்தனையையும் அப்படியே பெயர்த்து எடுத்து, ஆங்கில நாட்டுக்கு அனுப்பி, அங்கே பிரைட்டன் என்னும் பட்டணத்திலே ஒரு கலைக் கூடத்தையே நிர்மாணித்து விட முனைந்திருக்கிறான்.

மண்டபத்திலே உள்ள கற்கள், அக் கற்களைத் தாங்கும் தூண்கள் அத்தனைக்கும் நம்பர் போட்டு, பெயர்த்து எடுத்துக்