பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்களாம்பிகை என்ற சிறப்பைப் புலப்படுத்துகிறார். சுவாமி மலையில் மகாமண்டபத்தில் வடக்குச் சுவர்ப்பக்கம் ஒரு பீடத்தில் சபாபதி என்ற பெயரோடு இருப்பவர் நடராஜர் அல்ல, பாகுலேய மூர்த்தி என்று தெரிவிக்கிறார். தாராசுரத்தில் அர்த்தநாரி உருவத்தில் மூன்று தலைகளுடன் நிற்பவர் விசுவரூப மூர்த்தி என்று காட்டுகிறார். நாச்சியார் கோவில் கல்கருடன், கண்ணமங்கையிலுள்ள தேன்கூடு, திருவாரூரில் மூக்குத்தி தீர்த்தம் என்று வழங்கும் முக்தி தீர்த்தம், சூர சங்காரத்துக்கு முதல் நாள் முகத்தில் வேர்வை அரும்பும் சிக்கல் சிங்காரவேலன், ஆவுடையார் கோயிலில் பதினோரு கரத்தோடு வீற்றிருக்கும் வல்லப கணபதி - இப்படிப் பலவற்றைப் பற்றிய நுட்பமான செய்திகள் இதில் வருகின்றன.

வரலாற்றோடு பொருந்திய பலகதைகளை விசாரித்து அறிந்து நயமாகச் சொல்கிறார். செம்பியன் மாதேவியின் வரலாறு, வடுவூருக்கு. ராமன் வந்த கதை, தஞ்சையில் தளிக்குளத்துப் பெருமான் பெரிய கோயிலைப் பெற்றது, கிழவி நிழலில் பெருவுடையார் எழுந்தருளியது, துலுக்க நாச்சியார் சரிதை, பவானியில் காரோ என்ற ஆங்கிலேயர் வேதநாயகியை வணங்கியது முதலியவற்றைக் காண்க.

கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகள், கோயில் கட்டிய மன்னர்களின் பெருமை, புராணங்களில் வரும் வரலாறுகள், கர்ண பரம்பரைச் செய்திகள், தலத்தின் பெருமையைப் பற்றிய பாடல்கள் முதலிய பலவற்றையும் கோவையாக இணைத்துப் படிக்கப் படிக்க இனிக்கும் வகையில் இந்தக் கட்டுரைகள் ஓடுகின்றன. அந்த ஓட்டத்தைத்தானே விறுவிறுப்பு என்று இக்கால எழுத்தாளர்கள் சொல்கிறார்கள்?

இந்தப் புத்தகத்தைக் கோயிலுக்குப் போவதற்கு முன்பு படித்தால் ஒருவகை இன்பம் உண்டாகும்; போய் விட்டு வந்து படித்தால் அந்த இன்பம் பின்னும் பன் மடங்காகும். வெறும்