பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அத்தனையையும் பாராமல் அல்லவா திரும்பிவிட்டோம்' என்று ஆதங்கத்தோடு கடிதம் எழுதியிருக்கிறார். உண்மைதான். கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை வைத்துக்கொண்டு சென்றிருந்தால் பார்க்கவேண்டியவைகளை எல்லாம் பார்த்து அனுபவித்திருப்பார். இப்போது தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது; ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று, அந்த மாதத்தில் வெளிவந்த நான்கைந்து கோயில்களையும் பார்த்து வருவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு தலயாத்திரை துவங்குகிறார்கள் இவர்கள். இவர்களுக்கு எல்லாம் இப்புத்தகம் மிக உதவியாக இருக்கும் அல்லவா!

இந்த மூன்றாம் தொகுதிக்கு, ஒரு நல்ல முன்னுரையை, கலைமகள் ஆசிரியர், நண்பர் திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. சில மாதங்களுக்கு முன் அவர்கள் என்னிடம், உன் கட்டுரைகளை யார் யார் எல்லாம், படிக்கிறார்கள் தெரியுமா? காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சுவாமிகள் ஒழுங்காய்ப் படிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள் என்றார். இதைக்கேட்டு நான் அப்படியே மூர்ச்சித்துவிட்டேன். நாட்டில் ஆஸ்திகத்தை வளர்க்கவும் சமய அறிவைப் பரப்பவும் குருமூர்த்தியாக எழுந்தருளிய ஆச்சார்ய சுவாமிகளே படிக்கிறார்கள் என்றால் அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும் எனக்கு. இந்தப் புத்தகத்தை ஜகத்குரு ஆச்சார்ய சுவாமி அவர்களுக்கே சமர்ப்பித்து அதனால் மகிழ்ச்சி அடைகிறேன்.

புத்தகம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள், புத்தகத்தை அழகாக அச்சிட்டுக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லாவற்றிக்கும் மேலாக இக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தக உருவாய் வெளியிட அனுமதி தந்த கல்கி ஆசிரியர் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.

இத்தொகுதியின் வெளியீட்டைப் பெரிய விழாவாகவே நடத்தத் திட்டமிட்டுள்ள கோவை நன்னெறிக் கழகத்தாருக்கும் என் நன்றியும் வணக்கமும்.

சித்ரகூடம்
திருநெல்வேலி
17-9-61
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.