பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

தல யாத்திரை செய்வதென்பது இந்த நாட்டுக்கே உரிய நல்ல பழக்கங்களில் ஒன்று, மற்ற நாடுகளில் உல்லாச யாத்திரை போவதுண்டு. தல யாத்திரை அவர்களுக்குத் தெரியாதது. மற்ற நாடுகள் இருக்கட்டும்; நம்முடைய பாரத நாட்டிலே கூட வட நாட்டுக்குப் போனால் தீர்த்த யாத்திரை தான் நன்றாகச் செய்ய முடியும். ஏதோ அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகச் சில தலங்கள் உண்டு. அவற்றிற்கும் எத்தனையோ சிறப்புக்கள் இருக்கின்றன. இருந்தாலும் அங்கே போனால், மற்றவர்கள் துதிப்பதைக் கொண்டும் மனத்தில் மதிப்பும் பக்தியும் உண்டாகி வழிபட வேண்டும். -

ஆனால் தமிழ் நாட்டுத்தலங்கள் அப்படியா இருக்கின்றன? கோவிலின் தோற்றமே ஆளைப் பிரமிக்கவைத்து விடுகிறது, எத்தனை மேல் நாட்டினர்கள் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலைக் கண்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றிருக்கிறார்கள்!

கோயிலைக் கட்டுவதும் சிற்பங்களைக் கொட்டுவதும் கல்லெழுத்து வெட்டுவதும் இந்த நாட்டு அரசர்களுக்கெல்லாம் பரம்பரை வழக்கங்களாக இருந்து வந்துள்ளன. முன்பேதான் கோயில் இருக்கிறதே என்று இராமல் மேலும் மேலும் பின்வந்த அரசர்கள் கோயில்களை விரிவாக்கினார்கள், தங்கள் தங்கள் காலத்து வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுக்களைப் பொறித்தார்கள். ஊர் சிறியதாக இருந்தாலும் கோயில் பெரியதாக இருப்பதைப் பார்த்தால் “அந்தக் காலத்தில் இதை எப்படிக் கட்டினார்கள்!” என்று வியப்படையத்தான் தோன்றும்.

தமிழ் நாட்டு நாகரிகமே கோயிலைச் சுற்றி வளர்ந்தது என்று சொல்லிவிடலாம். சிற்பக்கலை, இசைக்கலை, நாட்டியக் கலை, காவியக்கலை, அலங்காரக்கலை, பூத்தொடுக்கும் கலை - ஏன், மடைப்பள்ளிக்கலை கூடத்தான் - கோயில்களிலே