பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. நாச்சியார் கோயில் நாச்சியார்

ழந்தமிழ் இலக்கியமான கலித்தொகையில் ஒரு காதல் கதை. ஆம், அந்தக் ‘கற்று அறிந்தார் ஏத்தும் கலியில் எத்தனை கதைகள்! நான் சொல்லும் கதை பலர் படித்து அனுபவித்ததுதான். ஒரு பெண்; அவள் சிறுமியாக இருக்கும்போது பக்கத்து வீட்டுப் பெண்களுடன் கூடிச் சிறு வீடு கட்டி, சோறு சமைத்து, விருந்தருந்தி எல்லாம் விளையாடுவாள். ஆண்பிள்ளைகளை அவள் விளையாட்டில் சேர்த்துக் கொள்வதில்லை. அதனால் கோபமுற்ற அடுத்த தெருப்பையன் ஒருவன் வருவான்; இவளது பந்தை எடுத்துக் கொண்டு ஓடுவான்; கையால் கட்டிய சிறு வீட்டைக் காலால் அழிப்பான். இப்படிச் சிறு சிறு குறும்பு செய்வதே அவன் தொழில்.

ஆண்டுகள் கழிகின்றன. பெண் வளர்ந்து மங்கைப் பருவம் அடைகிறாள். குறும்பு செய்த பயலும் வளர்ந்து கட்டிளங்காளையாகிறான். ஒருவரையொருவர் பார்க்கின்றனர் ஒருநாள், அந்தப் பார்வையிலேயே காதல் பிறக்கிறது இருவருக்கும். என்றாலும், நெருங்கிப் பேசியதில்லை, பழகியதில்லை. தன் காதலை வெளியிட ஒரு