பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வேங்கடம் முதல் குமரி வரை

இப்படியே கண்ணமங்கைக் காராளனைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீரே, இங்குள்ளதாயாரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்றுதானே நினைக்கிறீர்கள். அவரசப்பட வேண்டாம். அவளைத்தான் பார்க்க இப்போது உடனடியாகவே அழைத்துச் செல்கிறேன். பக்தவத்ஸலருக்கு வடபக்கத்தில் தனிக்கோயிலில் அபஷேகவல்லித் தாயார் இருக்கிறாள். அங்கு சென்று அவளை வணங்குபவர்களுக்கு ஓர் அதிசயம் காத்து நிற்கும். இந்தத் தாயார் சந்நிதியிலே ஒரு பெரிய தேன் கூடு; இந்தத் தேன் கூடு இங்கே எப்போது கட்டப்பட்டது என்று சொல்வார் ஒருவரும் இல்லை. ஆனால் இந்தத் தேன் கூடு இங்கே கட்டப்பட்டதற்கு ஒரு கதை மட்டும் உண்டு.

கண்ணமங்கை நகராளனைப் பிரிய விரும்பாத முனிபுங்கவர் பலர் தேனியாகப் பிறக்க வரம் வாங்கிக் கொண்டார்களாம். அவர்களே இங்கே கூடு கட்டி அனவரத காலமும் பக்தவத்ஸலன், அபிஷேக வல்லி இருவரையும் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு ரீங்காரம் செய்து வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தேன் கிடைப்பதும் அவ்வளவு சிரமமானதாக இல்லை . பெருமானின் மார்பை அலங்கரிக்கும் அலங்கல் மாலையிலே தான் அளவிறந்த தேன் உண்டே. அந்தத் தேனையே உண்டு உண்டு திளைத்து எந்நேரமும் பாடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இத்தேன் கூட்டுக்கு இல்லை, இத்தேன் கூட்டில் வாழும் முனிவர்களுக்குத் தினமும் பூசை நடக்கிறது.

திருக்கண்ண மங்கை செல்வோர் இந்தத் தேன் கூட்டைக் கண்டு தொழாமல் திரும்புவதில்லை. நாம் மட்டும் தொழாமல் திரும்புவானேன்? தேனை உண்ண வழியில்லை என்றால் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டே திரும்பி விடலாம். கண்ணமங்கை வைணவத் திருப்பதிகளாம் நூற்றெட்டில் ஒன்று. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி பாடிய