பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

73

நல்குகிறார். அதனால் காட்டானையாகப் பிறந்து வளர்ந்த ஐராவதம், இத்தலத்துக்கு வந்து தன் கொம்புகளாலேயே குத்திக் குத்தி இந்தத் தடாகத்தை உண்டாக்கி. இந்தத் தடாகத்திலுள்ள தண்ணீரையே தன் துதிக்கையால் முகந்து கொண்டு வந்து காளீசர், சோமேசருக்கு எல்லாம் அபிஷேகம் செய்யச் சாபவிமோசனம் ஆயிற்றாம். அன்று முதல் இந்தத் தடாகம் ஆனைமடு என்றே வழங்கப்பபடுகிறது.

இந்தக் காளையார் கோயில் என்னும் கானப்பேர் மிகவும் பழைமையான ஊர் என்று தெரிகிறது. இந்த ஊரைச் சுற்றி ஒரு கோட்டை இருந்திருக்கிறது. அந்தப் பழைய சங்க காலத்திலேயே, அப்போது பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் தான் உக்கிரப் பெருவழுதி. இவனே திருக்குறள் அரங்கேறும் போது அரியாசனத்திலிருந்த பெருமகன். இவன் அப்போது இந்தக் கானப்பேரூரில் இருந்த வேங்கை மார்பன் என்னும் சிற்றரசனை வென்று அவன் கோட்டையைக் கைப்பற்றியதால், 'கானப் பேரெயில் எறிந்த உக்கிரப்பெருவழுதி' என்ற விருதைப் பெற்றிருக்கிறான். சோழ மன்னர்களும் பாண்டிய மன்னர்களும் இக்கோயிலைக் கட்டவும் பராமரிக்கவும் வேண்டியவைகளைச் செய்திருக்கிறார்கள். கி.பி.பதினான்காம் நூற்றாண்டில் முகம்மதியர் தென்நாட்டின் மீது படையெடுத்தபோது, ஸ்ரீரங்கத்து ரங்கநாதரையும் சேதப்படுத்தி விடுவாரோ என்று அஞ்சி, அங்குள்ள கர்ப்பக்கிருகத்தைச் சுவர் எழுப்பி மறைத்து விட்டு, பிள்ளை லோகாச்சாரியார் என்பவர், ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் இந்தக் கானப்பேரூருக்கே கொண்டு வந்து ஒரு சிறு கோயிலை அமைத்து அங்கு வைத்துக் காப்பாற்றியிருக்கிறார். இது பழைய கதை.

இந்தக் கோயில் திருப்பணியிலே சமீபகாலத்திலே முழுதும் ஈடுபட்டவர்கள் சிவகங்கையிலிருந்து அரசாண்ட பெரிய மருது, சின்ன மருது என்ற பாளையப்பட்டுக்காரர்களே. மூன்று சந்நிதிகளிலும் மண்டபங்களெல்லாம் கட்டி, சோமநாதரது கோபுரத்தையும் பெரிதாகக் கட்டிய பெருமை பெரிய மருதுவையே சாரும். இந்தக் கோபுரத் திருப்பணிக்குச் செங்கல் இந்தக் கோயிலிலிருந்து தென்மேற்கு