பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வேங்கடம் முதல் குமரி வரை

தசரத புத்திரனைச் சரணடைய அவனுடைய கிருபைக்குப் பாத்திரனானதும் இங்கேதான். ஆதலால் இத்தலத்தில் சரணாகதி தருமத்தை அனுஷ்டிக்கிறவர்கள் இகபர சுகங்கள் எல்லாம் பெறுவர் என்பது நம்பிக்கை

இத்தலத்தில் கல்யாண ஜகந்நாதன் என்ற பெயரோடு பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். தாயார் திருநாமம் கல்யாணவல்லி. கோயில் விமானம் கல்யான விமானம். கோயில் பிராகாரத்தில் ராமன் தர்ப்பசயனனாகச் சேவை சாதிக்கிறான் பட்டாபிராமன் சந்நிதி வேறு இருக்கிறது. இங்குள்ள ஹேமதீர்த்தம் சக்கர தீர்த்தம் பிரசிசத்தமானவை. சகல பாவங்களையும் போக்கவல்லவை. இக்கோயிலில் சிலா வடிவங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. என்றாலும், கோயிலில் செப்புப் படிமங்கள் பல பூசையில் இல்லாமல் இருக்கின்றன. ராமர், லஷ்மணர், பரதர் சத்துருக்னர் படிமங்கள் எல்லாம் இருக்கின்றன. எல்லாம் கவனிப்பார் அற்றுக் கிடக்கின்றன.

இங்குள்ள தல விருட்சம் அசுவத்த விருட்சம் என்னும் அரசமரம். அதன் நிழலில் நாகப்பிரதிஷ்டை செய்வோருக்கு மக்கட்பேறு உண்டாகும் என்று நம்பிக்கை. இத்தலத்தில் இவ்விருட்சம் அமைந்ததற்கு ஒரு புராணக் கதை வழங்கி வருகிறது.

ஆதியில் படைப்புத் தொழில் பராந்தாமனிடத்திலேயே இருந்திருக்கிறது. முதலில் பிரம்மாவையும் பின்னர் நவப்பிரஜாபதிகள், இந்திரன் முதலியோரையும் படைத்துப் பின்னரே பிரம்மாவைத் தொடர்ந்து சிருஷ்டி செய்யுமாறு பணித்திருக்கிறார். படைத்தல் தொழிலைச் செய்வதற்குத் தெற்கு நோக்கிப் பிரம்மா வந்தபோது கோடி சூரியப் பிரகாசத்தோடு ஒரு ஜோதி தோன்றி மறைந்திருக்கிறது. அந்த ஜோதியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது, பரந்தாமன், 'அதுவே போத ஸ்வரூபமான போதி மரம், அந்த மரத்தடியிலேதான் ஜகந்நாதன் தங்குகிறான்' என்று அருளியிருக்கிறான் அது காரணமாகவே போதி என்னும் அரச மரம் ஜகந்நாதனுக்கு நிழல் தரும் தருவாய் அங்கு அமைந்திருக்கிறது (போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரையும் விஷ்ணுவினது அவதாரம் என்று கொள்வது இதனால் தான் போலும்).