பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

87

இத்தலத்துக்கு திருமங்கை மன்னன் வந்திருக்கிறார்; இருபது பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்திருக்கிறார். அவர் பாடிய பாடல்கள் பல நாயக நாயகிபாவத்தில் அழகொழுகும் வண்ணம் இருக்கின்றன.

வில்லால் இலங்கை
மலங்கச் சரந்துரந்த
வல்லாளன் பின்போன்
நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என்தன்னை
ஏசிடினும் பேசிடினும்
புல்லாணி எம்பெருமான்
பொய் கேட்டிருந்தேனே

என்ற பாசுரம் பிரபலமான ஒன்றாயிற்றே. அனைவரும் கேட்டுக் கேட்டு ரசித்ததாயிற்றே.

இந்த ஆதி சேதுவின் காவலரே ராமநாதபுரம் ராஜாக்கள். சேதுக் கரையையும் உள்ளடக்கிய பிரதேசத்தின் மன்னர்களாக இருக்கிற காரனத்தால் அவர்களைச் சேதுபதி என்று அழைத்தார்கள். திருப்புல்லாணிக் கோயில் எப்பொழுது கட்டப்பட்டது என்று தெரியவில்லை. பரராஜசேகர் ராஜா காலத்தில்தான் கோயில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இருபத்தேழு கிராமங்கள் இக்கோயில் பராமரிப்புக்காகச் சேது சமஸ்தானத்தாரால் விட்டுக் கொடுக்கபட்டிருக்கின்றன. அதற்குத் தாமிர சாஸனங்களும் ஓலைச் சாஸனங்களும் உண்டு, கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேதுபதியாக இருந்த கிழவன் சேதுபதி என்னும் ரகுநாத சேதுபதி அவர்கள் பதினோரு கிராமங்களை இந்தக் கோயிலுக்குத் தானம் வழங்கியிருக்கிறார். இவருக்குப் பின் வந்த விஜய ரெகுநாத சேதுபதி, முத்து ராமலிங்க சேதுபதி முதலியவர்களும் பல நிபந்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமாக நிறைய உப்பளங்கள் உண்டு. மன்னார் குடாக் கடலில் நடைபெறும் முத்துக் குளிப்பிலும் இந்தக் கோயிலுக்கு ஒரு பங்கு உண்டு என்று தெரிகிறது. எல்லாம் சொல்லி ஒன்று சொல்ல மறந்து விட்டேனே, இந்தத் தலத்தில் இரவில் நைவேத்தியமாகும் திருக்கண்ணமுது {பால்பாயாஸம்) மிக்க சுவையுடையது. பகலில் போகிறவர்களும்