பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

107

இப்படி மலைநாட்டுத் தலயாத்திரையைத் தொடங்கியவர், வழியில் அவிநாசியில் முதலை உண்ட பாலனை அழைத்து, அவனை அவனது பெற்றோர்களிடம் சேர்ப்பித்து விட்டு மேலும் நடக்கிறார், வழியில் உள்ள ஆறுகளையும், காடுகளையும் கடந்தே. இவரது வருகையை, அடியார்கள் சேரமான் பெருமாளிடம் ஓடோடி வந்து அறிவிக்கிறார்கள். சேரமன்னனது உவகை கட்டுக்கு அடங்காததாகிறது. கரை புரண்டோடும் அவரது உவகையை சேக்கிழார் தமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

என் ஐயன் அணைந்தான் .
எனை ஆளும் அண்ணல் அணைத்தான்
ஆரூரில் சைவன் அணைந்தான் .
என் துணையாம் தலைவன் அணைந்தான்
தரணி எலாம் உய்ய அணைந்தான்.
அணைந்தான் -

என்றே குதூகலிக்கிறார். ஆகவே அவர் நகரை எல்லாம் நன்றாக அலங்கரித்து, யானை மீது எதிர்கொண்டு வந்து, சுந்தரை அழைத்துச் செல்கிறார், தனது நகருக்கும் திருமாளிகைக்கும். அப்படிச் சுந்தரரை அழைத்துச் சென்ற இடம்தான் அவனது தலைநகரான வஞ்சி, அதுவே திரு அஞ்சைக்களம். மண வாழ்க்கையை எல்லாம் வெறுத்த சுந்தரர், அங்கிருந்தே தன் கயிலை யாத்திரையைத் துவங்குகிறார். இறைவனும் தன் தோழனாம் சுந்தரருக்கு வெள்ளானை எல்லாம் அனுப்பி கயிலைக்கு அழைத்து வரச் செல்கிறார்.

அதன்படியே சுந்தரர் புறப்படும் போது, கோமகனும் குதிரைமீது அமர்ந்து சுந்தரருடன் கயிலை செல்கிறார் இப்படி இரண்டு பெரிய தொண்டர்கள் கயிலையை நோக்கிப் பிரயாணம் புறப்பட்ட இடமே திரு அஞ்சைக்