பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வேங்கடம் முதல் குமரி வரை

அடைத்து வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். பகவதிக்கு அருகே இடது பக்கத்தில் சப்தமாதாக்கள் சந்நிதி இருக்கிறது. அவர்களோடு விநாயகரும் இருக்கிறார்.

இந்த சந்நிதியை அடுத்த தெற்கு நோக்கிய கோயிலிலே கோடிலிங்க புரேசர் என்ற திருப்பெயரொடு சிவபெருமான் லிங்க உருவில் இருக்கிறார். அவரை வலம் வரக் கூடாதென்கிறார்கள். பகவதியை வலம் வந்து கோடிலிங்க புரேசரது இடப்பக்கமாகவே சுற்றி வெளியில் வர வேண்டும்.

ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. கோயிலுள் செல்லும் போதே வாயில் முன்புள்ள கடையில் மிளகு பாக்கெட்டுகள் வாங்கி உள்ளே பகவதிக்கு பூசை செய்யும் அர்ச்சகரிடம் கொடுத்து விடலாம். அதையே அவர் நமது ஆராதனைப் பொருளாக ஏற்று நைவேத்தியம் செய்து விடுவார். இப்படி கொடுங்கோளூர் பகவதிக்கு, வணக்கம் செலுத்தி விட்டு வெளியே வந்தால், அந்தக் கோயிலுக்கு இடப்புறம் ஒரு சிறு கோயிலைப் பார்ப்போம். அங்கு சென்று பார்த்தால் அங்கு கோயில் கொண்டிருப்பவர் க்ஷேத்திரபாலர் என்று அறிவோம்.

க்ஷேத்திரபாலர், பைரவ மூர்த்தங்களில் ஒன்று. பெரிய கம்பீரமான வடிவம், எட்டு ஒன்பதடி உயரம், அதற்கேற்ற காத்திரம், அவரையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம்.

கொடுங்கோளூர் பகவதியைக் கண்ணகி என்பவர்கள், இந்த க்ஷேத்திரபாலரை கோவலன் என்கிறார்கள். கோவலனுக்கும், க்ஷேத்திர பாலருக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை. இனி ஒரே ஒரு கேள்வி. உண்மையிலேயே கொடுங்கோரூர் பகவதி கண்ணகியின் வடிவந்தானா? சோழ நாட்டில் உள்ள புகாரில் பிறந்து வளர்ந்து, கோவலனை மணந்து, பின்னர் அவனுடன்