பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

வேண்டும் விடுதலை

காண்கிறோம். ‘சொத்தையும் சொள்ளையும்’ இல்லாத ஒருவராக அவரேனும் இருப்பதில்லை. தம் முதுகுப்படையை மூடிமறைத்துக் கொண்டு, நம் முகத்துத் தேமலைப் படையென்று பிதற்றித் திரிபவரை பின்பற்றுவற்குப் பத்துப்பேர் இருக்கத்தான் இருப்பார்கள். நம்மவர்களில் இன்னும் சிலர் உண்டு. அவர்கள் நம் வினைத் திட்டங்கள் அனைத்தும் சரியில்லை யென்று கூறிக் கொண்டே நம்முடன் உணவுக் கடை முதல் சிறைக்கூடம்வரை ஒட்டி வந்து கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் நடுவில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றதை மிகுவாகப் பார்க்கலாம். அவர்கள் இருதரப்பினரையும் ஏமாற்றிக் கொண்டு. அல்லது இரண்டு புறத்தினரிடையும் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு, இலைக்கு எண்ணிக்கையாக வந்து நிற்பவர்கள். அவர்களே வினைக்கு வேறு முகம் காட்டுபவர்கள். இவர்களிடத்திலெல்லாம் உண்மையான விடுதலைத் தொண்டர்கள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். இனி, இவர்கள் தவிர வேறு வகையான ஒருசிலரும் இருப்பதாகத் தெரியவருகிறது. ‘இன்னான் தொடங்கினான் இதை நாம் இதற்கேன் துணைபோக வேண்டும்: எதையாகிலும் சொல்லித் தட்டிக் கழித்து விட்டால் போகிறது'- என்று அவ்வகையினர் எண்ணுவதாகவும் தெரிகிறது. அத்தகையினர்க்கும் அவரைச் சார்ந்து போவார்க்கும் பணிவாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.

'பொதுத் தொண்டு என்பது இயல்பாக நாம் காற்றை உள்ளுக்கிழுத்து விட்டுக் கொண்டிருக்கின்றோமே, அதைப் போன்றதன்று மூச்சைப்பிடித்துக்கொண்டு, நம் வழியில் கிடக்கும் பாறையை முதுகைக் கொடுத்து முட்டித்தள்ளுவதைப் போன்றது. நாம் இயல்பாக மூச்சை இழுத்து விடுவதைப் போல அதையும் செய்ய முடியாது. எவரேனும் முதலில் முன்னுக்கு வந்து மூச்சுப்பிடித்து நம் முன்னேற்ற வழியை யடைத்துக் கிடக்கும் தடைக் கல்லை முட்டுக்கொடுத்து, அப்புறத் தள்ளியே யாகல் வேண்டும். அதற்கு நீங்களும் முன் போகலாம். நாங்களும் முன் போகலாம். எவர் முன்னே போக வேண்டும். என்பது கட்டளையன்று. துணிவுள்ளவன், பொதுவுணர்வை அடக்க முடியாமல் வைத்துக் திணறிக் கொண்டுள்ளவன் எவனாகிலும் முன்னே போக வேண்டியது தானே! அவன் எவனாயிருந்தால் என்ன? ஊரறிந்த ஒருவன் தான் அதற்கு முன் வர வேண்டும் என்பதில்லை. வீடு தீப்பற்றிக் கொண்டால் “முதன்முதல் எங்கள் ஊர்த்தலைவர் தண்ணீர்க்குடத்தைத்