பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

வேண்டும் விடுதலை

பொதுவுடைமைப் போரில் அவர்கள் பதினைந்தாண்டுச் சிறைசென்ற பெருமை அவர்களைச் சேரக்கூடாது என்று நினைத்த தன்னதிகாரத் தந்நலத் தான்தின்னிக் கொடுமையர்கள் அவர்களைக் கொலைக்குற்றவாளிகள் எனச் சிறையில் அடைத்தனர். வரலாறு எப்பொழுதும் கண்மூடிக் கிடப்பதில்லை; அஃது எப்பொழுதும் தூங்குவதே இல்லை. அறிதுயில் கிடக்கின்ற அது, பாசறை வீரன் போல அடிக்கடி விழித்துக் கொள்ளும்! வெகுண்டு சீறும் ! வரலாற்றை யாரும் தூங்கவைத்துவிட முடியாது! ஏனென்றால் உண்மைதான் வரலாறாக மாறுகிறது.

அத்தகைய வீரவரலாறு படைத்த மண்ணில் தான் வரும் மே மாதம் 5, 6ஆம் ஆம் நாள்களில் தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடும், இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை மாநாடும் நடைபெற இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாநாட்டைத் தமிழகத்தின் முற்போக்கு இளைஞர் அணி நடத்துகிறது. அதில் தீவிரப் பொதுவுடைமை (மார்க்சிய இலெனினிய) வீரர் கலியபெருமாள் அவர்களும், பெரியார் சம உரிமைக் கழகப் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து அவர்களும், உலகத் தமிழின முன்னேற்றக் கழக முதல்வர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும், மக்கள் உரிமைக் கழகத் தலைவர்களும், இன்னும் பிற முகாமையரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இரண்டு நாள் மாநாட்டிலும் தலைவர்கள் நாட்டின் எதிர்காலம் பற்றியும், தமிழின விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை முயற்சிகள் பற்றியும் தீவிரமாகக் கலந்து ஆய்வு நிகழ்த்தி, இரண்டாம் நாள் மாநாட்டு இறுதியில் முடிவான எதிர்காலத் திட்டங்களை வெளியிட உள்ளனர்.

தமிழ்த் தேசிய இன விடுதலை வேட்கை கொண்ட அனைத்து அணிகளின் அறிஞர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் அனைவரும் தவறாமல் மாநாட்டில் பங்குகொள்ள வேண்டுகின்றோம்.

மாநாட்டில் கலந்துகொள்ளும் அறிஞர்கள், வீரர்கள், வரலாறு படைக்கப் போகும் மறவர்கள் அனைவரின் பெயர்ப்பட்டியலும், நிகழ்ச்சி நிரலும் அடுத்து வெளிவரும்.

- தமிழ்நிலம், இதழ் எண். 34, மார்ச்சு, 1984