பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

237

தொழிலியல் சீரழிவுகள், ஊதியக் கிளர்ச்சிகள், மொழியியல் வாழ்வியல் போராட்டங்கள்!

எங்கும் எந்த நிலையிலும் அமைதியாக இருக்க வேண்டிய கல்வித் துறைகளிலேயே போராட்டங்கள் ஊடுருவி விட்டன. மாணவர்கள் அமைதியாகப் படிக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகி விட்டன. பள்ளிகளையும் கல்லூரிகளையும் விட்டு வெளியேறி, மாணவர்கள் தொழிலாளர்களுடனும், போராட்டக்காரர்களுடனும், அரசியல்காரர்களுடனும் இணைந்து, தங்கள் எதிர்காலங்களைச் சிதைத்துக் கொள்ளுகின்ற முறையில், போர்க்கருவிகளைக் கைகளில் எடுக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலை நாட்டின் எதிர்காலத்தை எங்கே கொண்டு போய்விடும் என்று கருதிப் பார்க்கவும் இயலாமல் செய்து வருகிறது.

போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், கதவடைப்புகள், அதிகார முற்றுகைகள், கட்டட உடைப்புகள், போக்குவரத்துச் சிதைவுகள், பொதுச் சொத்துச் சேதங்கள் முதலியவை அங்கிங்கெனாதபடி எங்கும் நடந்து வரும் அன்றாடக் காட்சிகளாகி விட்டன.

போதும் போதாமைக்குக் கொலைகள், கொள்ளையடிப்புகள், கற்பழிப்புகள், கயமைத்தனங்கள் போன்ற குமுகாயச் சீரழிவுகள் வேறு, ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சூளுரைகளாக வானோங்கி வளர்ந்து வருகின்றன.

இவ்வாரவார அழிவுக் கிளர்ச்சிகளுக்கிடையில் தாம் அரசு விழாக்கள், வேடிக்கைகள், விளையாட்டுகள், சமயச் சந்தடிகள், கலை, காமக் கூத்தடிப்புகள் முதலிய பணப் பாழடிப்பு முயற்சிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசாலேயே வளர்க்கப் பெற்று வருகின்றன.

ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், திரைப்பட நடிக நடிகையர்களை விடக் கவர்ச்சியாக நடிக்கவும் பேசவும் முற்பட்டு, வெட்கங்கெட்ட விளம்பரப் பாணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு நாடகமாடி வருகின்ற இழிவுகள் நாள்தோறும் மிகுந்து வருகின்றன.

அறிவாளிகளுக்கும், அறிவிலிகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை. படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் அடையாளங்கள் விளங்குவதில்லை; நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் வேற்றுமைகள் புரிவதில்லை; அதிகாரிகளும் அரசியல்காரர்களும் ஒன்றாகவே