பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

வேண்டும் விடுதலை

அல்லது பாடி, இந்தி என்னும் காட்டெருமையை விரட்ட முடியாது. அதைக் கல்லால் அடித்துத் துரத்துகின்ற வகையில், 'தனித்தமிழ்நாடு' என்னும் கொள்கைக் கல்லால் அடித்து விரட்ட வேண்டும். 'தமிழ்நாடு தனிநாடு' ஆகாமல் இந்தி ஒழியாது! யாராலும் ஒழிக்க முடியாது. இதனைத் தெளிவாகத் தந்தை பெரியார் அவர்கள் உணர்ந்துதான் 1937-இலேயே தனித்தமிழ் நாட்டுப் பிரிவினையை வலியுறுத்தினார்கள். ஆனால், உயிர் மூச்சான இந்தக் கொள்கை என்னாயிற்று? ஏன் கைவிடப்பட்டது? இந்தக் கொள்கையை முன்வைத்து நாம் போராடினால் என்ன? ஏன் அச்சம்? அச்சப்பட்டு அச்சப்பட்டுத் தமிழினம் இத்துணைக் காலம், ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகள் அடிமையுற்றது போதாதா? அடுத்த தலைமுறையில் இப்பொழுதுள்ள போராட்ட நிலைகள் என்னாகும்? – என்பவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, அவற்றுக்கெல்லாம் முற்ற முடிந்த முடிபாக – வலித்தமான – ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டாவா?

வீரமணி நடத்துகின்ற இந்த இந்தியெதிர்ப்பு மாநாட்டைக் கலைஞர் நடத்தினால், எல்லா நிலையிலும் இன்னும் வலுப்பெற வாய்ப்பிருக்குமே! மேலும் இதுபோன்ற மாநாடுகளைக் கடந்த அறுபது ஆண்டுகளாகச் சென்னையிலேயே நடத்திக் கொண்டிருப்பதை விட, வடமாநிலங்களில், குறிப்பாகத் தில்லியிலேயே போய் நடத்தினால், இன்னும் எழுச்சியாக இருக்காதா?

வடநாட்டுத் தலைவர்களையும், இங்கு நடைபெறும் இந்தி எதிர்ப்பில் சேர்ப்பது ஒருவகை விளம்பரத்திற்குத்தானே பயன்பட முடியும்? அவர்களால் என்ன விளைவு ஏற்பட்டுவிட முடியும்? அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்திரா பேராயத்தை – அதன் ஆட்சியை எதிர்க்க இதையொரு வாய்ப்பாகத்தானே பயன்படுத்திக் கொள்கிறார்கள்! மேலும், அவர்கள் இந்தியை எதிர்ப்பதானால், அத்தகைய எதிர்ப்பை நம் தென்னாட்டு உறுப்பினர்களுடன் சேர்ந்து பேசுவதுதானே முறை? அந்த வகையில் அவர்கள் வடநாட்டுத் தலைவர்களையும் இணைத்துப் போராடலாமே! அவ்வாறில்லாமல், அவர்கள் தென்னாட்டில் கூட்டப்பெறும் மாநாடுகளில் வந்து, இந்தியெதிர்ப்புக் கருத்துகளை இங்குள்ள மக்களிடமே கூறுவதால் என்ன விளைவு ஏற்படப் போகிறது? அவர்களின் பொருட்டாகவே நாம் ஆங்கிலத்தை வேறு அளவிறந்து தூக்கிப்பிடித்துப் பேச வேண்டியிருக்கிறது.