பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

305

அவரைத் தெருத் தெருவாக, வீடு வீடாக அழைத்துச் சென்று ஒப்போலை கேட்கச் செய்தனர். இவருடைய தாய்கூட இத்தகைய ஆரவார வேலைகளைச் செய்ததில்லை. அது மட்டுமன்று. வேறு எந்த நாட்டிலுமே இல்லாத கொடுமை இது. ஏறத்தாழ 100 கோடி உருபா அரசுப் பணத்தைத் தம் கட்சிப் பணத்தைப்போல், தாராளமாகச் செலவிட்டுக் கொண்டு தில்லிக்கும் தமிழ் நாட்டிற்கும் நகர உந்தைப் போல் வானூர்தியைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு படை பரிவாரத்துடன் 12 முறை வந்து போக, இராசீவுக்கென்ன தமிழக மக்கள் மேல், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தின் மேல் அவ்வளவு அக்கறை? அது வேறொன்றுமில்லை; தமிழர்களை என்றென்றும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் படி விட்டுவிடக் கூடாது என்பதும், அவர்களை என்றென்றும் நிலையான அடிமைகளாகவே வைத்திருக்கவேண்டும் என்பதுந்தாம்! இதுதான் அவரின் உள்நெஞ்சத்தில் ஊசலிட்டுக் கொண்டிருக்கும் கருத்தாகும் நோக்கமாகும்!

இந்தியாவிலேயே பார்ப்பனியத்திற்கும் வடநாட்டு முதலாளிய ஆட்சிக்கும் சாவு மணி அடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவது தமிழ் நாட்டில் மட்டுந்தான்! தமிழர்கள்தாம் தங்கள் மொழி, இன, நாட்டு உரிமைகளுக்காக இங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படியேனும் இங்குள்ள விபீடணக் கும்பலை வைத்துக் கொண்டு, நிலையாக அடக்கி ஒடுக்கிவிட வேண்டுமென்று கனவு காணுகிறது இராசீவ் கும்பல்!

இந்த நிலையில் நீண்ட நெடுங்காலத்திற்குப் பின், அஃதாவது பதின் மூன்றாண்டுகளுக்குப் பின், இராசீவின் அம்மா இந்திரா காலத்தில் இறக்கிவிடப்பட்ட தி.மு.க., தம்முடைய ஆட்சிக் காலத்தில் மீண்டும் மேளதாளத்துடன் ஆட்சி அதிகாரத்தில் கால் வைக்கிறது, என்றால் இராசீவால் பொறுத்துக் கொள்ள முடியுமா? முடியாது தான்! தாமும் எவ்வளவோ முண்டி மூச்சுப் பிடித்துக் கொண்டு மூப்பனார் துணையுடனும், திண்டிவனத்தார், குமரியார் தாங்குதல்களுடனும், சிதம்பரனார் கெட்டிக்காரக் கட்டியங்காரத் தனத்துடனும், தம் மனைவி சோனியாவுடன் தமிழகம் முழுவதும் தேர்தல் ஊர்கோலம் வந்தார்; ஏழைகளின் மேல் அன்பிருப்பது போல் நாடகம் ஆடிக் காட்டினார்.

ஆனால் இவரும் இவரின் கட்சிக் கோடரிக்காம்புகளும் எதிர் பார்த்ததற்கு நேர் எதிராக, இங்குள்ள மக்கள் ஏதோ ஒரு