பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

329

கருத்துதான்! என்றும் மாறாத, அல்லது மாற்ற முடியாத இயற்கை நெறியன்று. இவர்கள் கூறுவதுபோல் இந்தியா என்றுமே ஒன்றாக இருந்ததில்லை. வரலாற்றுக் கெட்டாத காலந் தொட்டு, இதில் பல்வேறு இன மக்கள், அவர்களின் சிறியதும் பெரியதுமான பல்வேறு மொழிகள், அவை தழுவிய கலை, பண்பாடுகள், நாகரிகங்கள், பழக்கவழக்கங்கள், கடவுள் கொள்கைகள், ஆட்சி முறைகள் - முதலியவை என்றுமே இந்தியாவை ஒன்றாக, ஒரே தன்மையாக இருக்க விட்டதில்லை. எனவே, இந்தியா ஒன்றாக, ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதும் ஒரு பொருளற்ற ஆட்சிப் பேராசை கொண்ட வெறுங் கருத்துதான், அதனை இயற்கையாக்கி விட வடநாட்டிலுள்ள அரசியல் வீணர்கள் சிலர் கற்பனைக்கனாக்கண்டு வருவதும், அக்கனவை நனவாக்க இங்குள்ள சில அடிவருடிகளும், பதவி மோப்ப நாய்களும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அங்காந்து திரிவதும் வேடிக்கையிலும் வேடிக்கையாகப் போய்விட்டது. மேலும் இயற்கையே காலப்போக்கில் பல்வேறு படிநிலை மாறுதல்கள் அடையும்போது, இப்பொருளற்ற புன்னிலைப் பொய்க் கருத்துகள் மாறுபாடு அடைவதற்கு என்ன தடையாக இருக்கமுடியும்? இவ்வகையில் இந்தியா ஒன்றாக இருப்பதைத் தங்கள் வாழ்க்கைக்கு ஊதியமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகைத் தந்நலக் கூட்டமே, பிரிவினை வேண்டாம், ஒற்றுமை வேண்டும், ஒருமைப்பாடு வேண்டும் என்று முரண்டு பிடிக்கின்றனர்.

அன்றிருந்தது கூட்டுக் குடும்ப நிலை. இக்காலத்தில் நிலவுவதோ தனிக் குடித்தன நிலை மனப்பாங்கு இவ்வாறு காலநிலையும் ஒட்டுமொத்த மாறுபாடடைந்து, மக்கள் மனநிலைக்கு உகந்தபடியாய் இருக்க, ஓர் ஐந்தாண்டுக் காலம் ஆட்சி செய்ய வந்தவர்கள் 'இந்தியாவைப் பிரிக்கவிட மாட்டோம்' என்று கூறுகின்ற அளவில் அதிக உரிமை கொண்டாடுவது வல்லதிகார மனப்பாங்கே தவிர வேறில்லை. வலிவும் பொலிவும் பெற்றிருந்து அவற்றைக் காலப் போக்கில் இழந்து நிற்கும் ஒரு தேசிய இனத்தை, சாதி, மத அரசியல் பொருளியலால் வல்லாண்மை பெற்று நிற்கும் ஓர் இனத்தவர்கள் தங்கள் ஆளுமைக்குக் கீழ்தான் அடங்கி ஒடுங்கி உரிமையிழந்து வாழ்விழந்து கிடக்க வேண்டும் என்று கூறுவதற்கு என்ன உரிமையிருக்கிறது? தாக்குண்ட இனம் ஒட்டியிருக்க விரும்பினால் ஒட்ட வைத்துக் கொள்வதிலும் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் பேசுவதிலும் தவறில்லை. ஆனால் விரும்பத் தகாத ஒட்டுறவினின்று விடுபட்டுப்