பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

351

உரிமைகளையும், வாழ்வியல் உரிமைகளையும் பேசுவது எழுதுவது எப்படித் தவறாகும்? தமிழர்கள் இந்தியாவின் ஒரு தேசிய இனமில்லையா? இங்குள்ள மற்ற தேசிய இனங்களைப் போல இத்தமிழ்த் தேசிய இனமும் தன்னுரிமை கேட்பதும், இனி அதுவும் நிறைவேறாதபொழுது, தனிநாடு கேட்பதுந்தான் எப்படித் தேச 'விரோத' 'சதி' ஆகிவிடும்? அத்தகைய குரல் எழுப்புதல்கள், கோரிக்கை வேண்டல்களே குற்றம், சதி, தேச விரோதம் என்றால், குடியரசின், மக்களாட்சியின் இலக்கணம்தான் என்ன என்பதை ஆட்சியாளர்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா?

அண்மையில் இரும்புத் திரைக்குப் பின்னால், பொதுவுடைமைக் கொள்கை என்ற பெயரில் மக்கள் நலத்துக்கு எதிரான அனைத்ததிகார அடக்குமுறை ஆட்சி நடந்த உருசியா, அதன் நோக்கத்திற்கு எதிராகச் சின்னா பின்னப்பட்டுப் போய்விட்டது. இந்த உலக நாடுகளின் ஆட்சியாளர்களுக்கே ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

தேசியத் தன்னுரிமை என்பது ஏதோ மக்கள் நலத்துக்கு மாறான கோட்பாடு அன்று. அப்படியே தன்னாட்சி உரிமை - தனிநாட்டுக் கொள்கை என்பதும் அரசியல் கொள்கைக்கே ஆகாத கோரிக்கையும் அன்று. மக்களரசின் படிநிலை (பரிணாம) வளர்ச்சியே அவை.

இந்தியா ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள், ஏதோ மக்கள் நலம், நாட்டு நலம் கருதுகிறவர்கள் போலும், தன்னுரிமை. தன்னாட்சி அல்லது தனியாட்சி என்று கோருபவர்கள் மக்கள் நலன், நாட்டு நலன்களுக்கு மாறாகச் சிந்திப்பவர்கள் போலும் - ஆளும் வகுப்பினரால், அரசினரால் ஒரு மாயையான ஒரு தவறான எண்ணம் மக்களிடையில் உருவாக்கப்படுகிறது. இது மக்கள் நலனுக்கே எதிரான சிந்தனையாகும்.

வழி வழியாக அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் அடிமைப் படுத்தப்பட்டும் வரும் ஓர் இனம், தன்மான உணர்வு கொண்டு, தனக்குள்ள தான் இழந்துபோன வாழ்வியல் உரிமைகளுக்காக குரல்கொடுப்பதும், போராடுவதும் தவறு என்று எந்த அரசியல் நலச் சிந்தனையாளரும் இதுவரை கூறியதில்லை.

இக்கால் ஆட்சியிலுள்ள பார்ப்பனீய முதலாளிய ஆட்சியாளர்தாம் இதற்குக் குதர்க்கமான பொருளை எடுத்துக்கொண்டு மக்கள் நலத்துக்கு விரோதமான பொருளை அதற்குத் தந்து, மக்களிடையில் தவறான கருத்துப் பரப்புதலை உருவாக்கி வருகின்றனர். ஒற்றுமை என்பதும் ஒருமைப்பாடு என்பதும் அதிகாரத்தாலோ