பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

35

இந்நிலையில் அவர்கள் ‘காசி’ யை (வாரணாசி)யாக மாற்ற விரும்பு வார்களே தவிர, ‘மெட்ராசை’த் ‘தமிழக’மாக்க விரும்பார். இதுபற்றி அவர்கள் முன்பே எண்ணி முடிவு கட்டிக் கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பிற வடமாநிலங்களின் பெயர்களையெல்லாம் (காசுமிரி- காசுமிரம், பஞ்சாபி- பஞ்சாப், வங்காளி- வங்காளம்; ஒரியா- ஒரிசா, பீகாரி- பீகார்; குசாரத்தி- குசராத், மராத்தி- மகாராட்டிரம் என) மொழியடிப்படையில் பெயர் வைத்தவர்கள் தென் மாநிலங்களான தெலுங்கு வழங்கும் மாநிலத்தை ஆந்திரம் என்றும், மலையாளம் வழங்கும் மாநிலத்தைக் கேரளம் என்றும்; கன்னடம் வழங்கும் மாநிலத்தை மைசூர் என்றும்; தமிழ் வழங்கும் மாநிலத்தை மெட்ராசு என்றும் வைக்கின்ற பொழுதே தென்னாட்டினர்க்கு மொழியுணர்வும் இனவுணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாதென்று கருத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிகின்றது இல்லையா? இப்படிப்பட்ட மொழியுணர்வு ஏற்படக் கூடாதென்று கருதிக் கொண்டதற்குக் காரணம் பிராமணியமே! பொதுவாகப் பார்ப்பனர் இந்தியா முழுமையும் பரவியுள்ளனர் என்றாலும், அவர்களின் மிகுந்த வலிமை தென்னகத்திலேயே ஊடுருவி நிற்கின்றது. தென்னகத் திராவிடக் குடும்பத்தில், அவர்களின் வல்லாண்மை மொழியளவிலும், இன அளவிலும் இரண்டறக் கலந்து நிற்கின்றது. திராவிட மொழிகளான மலையாளம் தெலுங்கு, கன்னடம் முதலியவற்றிலிருந்து சமசுக்கிருதம் முற்றும் நீக்கப்படுமானால் அவற்றின் எஞ்சிய பகுதிகளெல்லாம் தமிழ் மொழியாக ஒளிவிடுவதை எவரும் மறுத்தோ, தடுத்தோ விடமுடியாது, எனவே தான் தென்னகத்தார்க்கு மொழியுணர்வு ஏற்பட்டுவிடக் கூடாதென்ற எண்ணம் வடவர்களை விடப் பிராமணர்களுக்கு மிக ஆழமாகப் பதிந்து கருவளவில் பொதிந்து நிற்கின்றது. இந்நிலையில் திராவிட மாநிலங்கள் எவற்றையும் மொழிப் பெயரிட்டுக் கூறுவதை எந்தப் பிராமணனும், வடவனும் ஒப்புக்கொள்ளான். அதற்கான சட்ட அமைப்புகளையும் அவர்கள் கைகளில் வைத்துக் கொண்டுள்ளனர் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

மேலும் அரசியல் அமைப்பு போன்றே இந்தியாவின் குமுகாய அமைப்பும் சிக்கல் வாய்ந்ததாகவே உள்ளது. எவரும் எந்தக் காலத்தும் இங்குள்ள வேறுபாடுகளையும், சமயப் பூசல்களையும் வேரறுத்து விடாதபடி சட்டத்தில் காப்புச் செய்யப்பட்டுப் பூட்டிடப் பெற்றுள்ளது. சமயச் சார்பற்ற அரசு என்று