பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

57

வறுமையிலும் சிக்கித் தொல்லைப்படுகின்றனர். அவர்களை மீட்பதற்கு எவரும் முன்வரவில்லை. நானும் காமராசரும் இந்நாள் வரையிற் பிரிந்திருந்தோம், ஆனால் இன்றைய மக்களோ நாளுக்கு நாள் முன்னேற்றம் அடையாமலேயே இருக்கின்ற நிலையைப் பார்க்கின்ற பொழுது, நாங்கள் இருவரும் பிரிந்திருப்பது எனக்குச் சரியாகப்படவில்லை; எனவே ஒன்று சேர்ந்து, மக்களெல்லாரும் தாங்கள் தாங்கள் கற்பித்துக்கொண்ட குல, இன வேறுபாடுகளை அறவே நீக்கிக் கொள்ளவும், சம வாய்ப்புடன் கல்வி கற்கவும் நாட்டு நலன்களை ஒருமித்து நுகரச் செய்யவும் பாடுபடுவோம். அதற்கு முன்னோடித்தனமாக இதோ பாருங்கள் என் மேனியிலிருந்த பூணூலைக் கழற்றி யெறிந்துவிட்டேன், விட்டு வைத்திருந்த ஓரிரண்டு வெள்ளை மயிர்களையும் பிடுங்கி எறிந்து விட்டேன்: இன்றிலிருந்து நானும் காமராசரும் ஒன்றே! - என்ற முறையில் இவ்வறிக்கையில் கூறப் பெற்றிருக்கின்றதா? இல்லையே! பின் காமராசரும் தாமும் ஒன்று என்று மக்கள் ஏன் கருதிக்கொள்ள வேண்டும் என்று இராசாசி குறிப்பிட்டிருக்கிறார் என்று கேட்கின்றீர்களா? மக்களே, தேசம் அபாயநிலையில் இருக்கின்றது, அஃதாவது நாஸ்திக வலைவிரிக்கப் பெற்றிருக்கின்றது. அதில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதில் சிக்காமல் இருக்க வேண்டுமானால், சூரிய பகவானைக் காயத்ரீ மந்திரத்தால் பக்தி செய்து உங்களைச் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். காயத்ரீ மாந்திரம் தெரியவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை என் ஜாதிக்காரர்கள் அங்கங்கே இருக்கிறார்கள்; இதோ என் பக்கத்தில் உள்ள கருப்புக் காக்கை காமராஜை நான் காயத்ரீ மந்திரத்தால் ஆசீர்வாதம் செய்து சுத்தப்படுத்தி விட வில்லையா? அப்படியே சுத்தப்படுத்துவார்கள், நீங்களும் உடனே சோப்பு சீப்பு என்று நன்றாக போட்டு 'ஸ்நானம்' பண்ணாமலேயே சுத்தமாகி விடுவீர்கள் என்று பச்சையாகப் பொருள் படும்படியும் 'இத்தகைய நம் இனக்காப்பு வேலைகளுக்காகவே காமராஜை விபீஷணத் தலைவரைத் துணையாக்கிக் கொண்டுள்ளேன்; அவரும் இனிமேல் என் சொற்படி நடப்பதாக உறுதி, கொடுத்துள்ளார்’ என்றும் அவர்களுக்கு விளக்கியிருக்கிறார். அந்தப்பொருளைத் தவிர அந்த அறிக்கையில் வேறு என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதை எந்தச் சுதேசமித்திரனோவது, 'தினமணி'யாவது 'கல்கி'யாவது 'ஆனந்த விகட'னாவது 'துக்ளக்'காவது அல்லது எந்த வீபிடணப் பிரகலாதனாவது விளக்கிக் கூற முடியுமா?