பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வேண்டும் விடுதலை

இராசாசி என்ன 'சூரியபகவானு'க்குத் தாத்தாவா? அல்லது பெயரனா? அல்லது புரோகிதனா? சூரியன் 'ஜகஜ்ஜோதியாக' ஜொலிப்பது, மூதறிஞர் (!) இராசாசி சொல்லித்தான் உலகத்திற்குத் தெரியுமா? 'அவன்தான் இந்தப் பூலோகத்திலுள்ள ஜீவன்களுக்கெல்லாம், மரம், செடி கொடி உட்பட எல்லா ஜீவராசிகளுக்கும் தாயும் தகப்பனும் ஆவான்’ என்றால் அவன் பிள்ளைகளாக உள்ள நமக்குள் ஏன் பூணூல் தன்மையும் பூணூல்லற்ற தன்மையும்? பூணூல் போட்ட பார்ப்பனப் புரோகிதர்கள் எந்தச் சூரியனுக்குப் பிறந்தவர்கள்? போடாதவர்களு எந்தச் சூரியனுக்குப் பிறந்தவர்கள்? சூரியபகவான்தான் நமக்குப் பலம், விவேகம். அன்னம் ஆரோக்கியம் எல்லாம் என்றால், சீனனுக்கும், உருசியனுக்கும், அமெரிக்கர்க்கும் வேறு சூரிய பகவானா இவற்றைக் கொடுத்துவருகின்றான்? காயத்ரீ மந்திரத்தால் தினம் 'பக்தி செலுத்தித்தியானித்து' அவன் தேஜஸை பெறவிரும்பாத அவர்களுக்கு, இந்த இராசாசியின் தாத்தாவான சூரிய பகவான் எதற்காக நம்மை விடப் பலம், விவேகம், அன்னம் ஆரோக்கியம் முதலிய எல்லா நலன்களையும் தர வேண்டும்? நாள்தோறும் ஆயிரக்கணக்கான பிராமணப் 'புரோகிதர்கள் பல்லயிரக் கணக்கான நீர் நிலைகளில் நின்று கொண்டு காலையும் மாலையும் காயத்ரீ மந்திரத்தைச் சொல்லிப் பக்தியுடன் தியானிக்’கும் இந்நாட்டில் ஏன் அறியாமையும், பஞ்சமும், பட்டினியும் தாண்டவமாட வேண்டும்? சூரியத் தாத்தாவையே அளந்தறிய முற்படும் அறிவியல் காலத்தில் எதற்காக இந்தப் பித்தலாட்டமெல்லாம்? இராசாசிக்கு மூளைக்குழப்பமா என்ன? நாட்டின் மேலாளுநர் (Governer Genernaral) ஆக இருந்த ஒருவர், பச்சையாகப் புளுகி இந்த அளவில் மக்களை ஏமாற்றுவதா? இந்தக் கொடுமை எந்த நாட்டில் நடக்கும்? இவர் எப்படியோ உளறிக் கொட்டிக்கொண்டு கிடக்கட்டும்! இந்தக் காமராசருக்கு என்ன வந்தது? ஏன் அவருடைய மூளை இப்படி யெல்லாம் போனது? தெளிவான கொள்கையும், கருதியதைச் செய்யும் துணிவும், வல்லமையும் படைத்தவராகக் கருதப்பெற்று வந்த அவருக்கு ஏன் இந்த இழிநிலை வந்தது.?

'அவரவர் தலையெழுத்துப்படி படிக்கட்டுமே' என்று அன்று இராசாசி கூறியதற்கு வெகுண்டெழுந்து, "தலையெழுத்தா ? எவனதை எழுதினான் கொண்டுவா; நான் அதை மாற்றி எழுதுகிறேன்" என்று ‘67 தேர்தலில் கூட்டந்தொறும் முழங்கி வந்தவர் ‘1972 வருவதற்கு இரண்டாண்டு இருக்கையிலேயே, தம் தலையெழுத்தை