பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

65

எவரெவரோ எழுப்புகின்ற பிரிவினைக் கூப்பாடுகளுக்கெல்லாம் எதிர்க்கட்சிகாரர்களும் மக்களும் எங்கள் மேல் பழி சுமத்துகின்றார்கள்; நாங்கள் பிரிவினைக் கொள்கையை என்றோ விட்டு விட்டோம்; அதில் ஐயப்பட வேண்டா என்று கலைஞர் அவர்கள். இலை மறை காயாகப் பேசியதைப் பார்த்து என் போன்றவர்கள் மனம் மிகவும் புழுங்கிச் சாகின்றது. இதில் என்ன தயக்கம் - இரக்கம் காட்ட வேண்டி வந்தது?

இந்நாட்டில் பிரிவினைக் கொள்கையை உடும்புப் பிடியாக விடாமல் கூறிவருபவர் தமிழர் தந்தை பெரியார் ஒருவர்தாம். அடுத்தபடி ஆதித்தனார். ஏதோ வருமானத்திற்காகக் கொஞ்ச நாட்கள் கூப்பாடு போட்டுப் பார்த்தார். அதன் பின் கூப்பிட்ட குரல் வந்த பக்கம் போனவர் இது வரை திரும்பவே இல்லை; குரல் கொடுக்கவும் இல்லை. அவருக்கடுத்தபடி தமிழ்நாட்டைப் பிரித்தே ஆக வேண்டும் என்று முரண்டு பிடிப்பவர்கள் நாம்தாம்! அஃதாவது தனித் தமிழ்க் கொள்கைக்காரர்கள் தாம் பின் வேறுயார் இருக்கிறார்கள்? எங்களை எதற்குப் பெரியவர்களாகக் காட்டவேண்டும் என்பது கலைஞர் கருத்தோ என்னவோ? ‘யாரோ’ என்று சொல்லியிருக்கிறார் எஃது எப்படியானாலும் இங்குள்ள ஆட்சியாளர்கள் சிலர் சொல்வதைக் கேட்டும், பிரிவினைக் கொள்கையால் இந்தியாவுக்கே ஏதோ பெரிய கேடு வந்து விட்டதைப் போலும், இங்குள்ள தேசியத் (1)தலைவர்கள் சிலர் (அதுவும் திருவாளர் பக்தவத்சல, சுப்பிரமணியன்களை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது. ஐயோ, பிரிவினையா? 'ஆச்சா, போச்சா' என்று இருப்புச் சட்டியில் ஊற்றிய எண்ணெய் போலவும், எண்ணெயில் இட்டபலகாரம் போலவும் கொதிக்கவும் குதிக்கவும் செய்வதைப் பார்த்தால், இந்திராகாந்தி அம்மையார் யாரங்கே பிரிவினை கேட்பது? ஓ! மானெக்சா... ஓடிப் போய் அந்த முண்டத்தைப் போய்க் கட்டியிழுத்து வந்து பிண்டம் பிண்டமாக அறுத்துப் பிழிந்து எண்ணெயாக்கி எனக்குத் தலை முழுக்காட்டுங்கள்! என்று சொல்லி விடுவது போல ஏன் அஞ்சி அஞ்சித் தொலைக்க வேண்டும்? அப்படியே சொல்லி விட்டால் தான் என்ன கேட்டுப் போகிறது? இக்கேடு கெட்ட ஆட்சியில் உள்ளதை விட இந்திராகாந்தி தலைக்கு எண்ணெயாகப் போனாலும் நல்ல பயனில்லையா? அதுதான் நாங்களே - அதாவது நானே முந்திரிக் கொட்டைத்தனமாக இதைக் கூறவேண்டி வந்தது.

“ஐயா, பொதுமக்களே! (பழைய பாணியில் சொல்வதானால் மகாசனங்களே!) இந்தப் பிரிவினை கிரிவினை என்று கூறுவதுதெல்லாம் வேறு யாருமில்லை’ங்க, நாங்க, தாம் ஆமாம்; உறுதியாகச் சொல்வி விட்டோம். இதிலே ஒளிவு மறைவுக்கே இடமில்லை’ங்க” இங்கு