பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

67

மூன்றாவது, இந்நாட்டு மக்களின் ஒட்டு மொத்தமான மூடநம்பிக்கைகளுக்கு என்னால் கட்டுப்பட முடியாது. நான் இவர்களில் ஒருவன் என்பது என் விரும்பமின்றியே பறைசாற்றப்படுகின்றது. அப்படி என்னையறியாமலேயே நான் இவர்களைப் போலப் பகுத்தறிவற்றவனாகவும், திருந்தாத பண்பற்ற மாந்தனாகவும் ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கின்றது. நான் அல்லது என்னைப் போல் உள்ள தனிப்பட்ட ஒருவன் எவ்வளவுதான் அறிவாலும் பண்பாட்டாலும் உயர்ந்திருந்தாலும், என்னையும் சமய, குலப் பிரிவினைகளால் நெருக்குண்டு அறியாமைச் சேற்றில் அழுந்திக் கிடக்கும் இவர்களுடன் ஒப்பவைத்துக் கூறிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு நான் உட்பட வேண்டியிருக்கிறது. எனவே இம்மக்களிலிருந்து நான் பிரிந்து போகவே விரும்புகின்றேன். அல்லது என்னைப் போல் தன்னுரிமை விரும்பும் மக்களுடன் நான் ஒருங்கிணைய விரும்புகின்றேன். இப்படியிருப்பவர்களின் தொகைக் கேற்ப, ஒரு நிலப்பகுதியை இந்நாட்டிற்குள்ளேயே என் போன்றவர்களுடன் எங்கள் வாழ்விடமாக ஒதுக்கிக் கொள்ளவும் விரும்புகின்றேன்.

நான்காவதாக, நான் சார்ந்துள்ள இந்நாட்டுச் சட்டத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. இச்சட்டம் இங்குள்ள என் போன்ற மக்கள் யாவருக்கும் பொதுவாக இயற்றப் பெற்ற சட்டம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. இதை இயற்றிய ஆறு பேர்களில் நான்கு பேர் இந்நாட்டின் மிகச் சிறுபான்மையராகவும் இங்குள்ள மிகப்பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய் ஏமாற்றிக் கொண்டும் அடிமைப்படுத்திக் கொண்டும். அவர்களுக்குள் மேலும் மேலும் ஒற்றுமையும் முன்னேற்றமும் ஏற்படாதவாறு மடமைப் படுத்திக் கொண்டும் உள்ள ஆரியப் பார்ப்பன அஃதாவது பிராமண இனத்தின் காவலர்களாவர். அவர்கள் தங்கள் இனத்தைக் காத்துக்கொள்ள வேண்டியும் பிற இனத்தவர்களைத் தங்கட்கு அடிமைப்படுத்திக் கொள்ள வேண்டியும் தங்கள் முன்னோர்களால் எழுதிவைக்கப் பெற்ற வேத, புராண, இதிகாசங்களைப் போலவும் தங்களுக்கு முற்றும் உகந்ததும் இந்நாட்டிலுள்ள என் போன்ற பிறரை முற்றும் வஞ்சிப்பதும் ஆன 'மனு தரும சாத்திரம்' என்ற வருணாசிரம தர்மக்கோட்பாட்டு நூலை அடிப்படையாக வைத்தும் செய்து கொண்ட நூலே இந்நாட்டில் சட்டம் என்ற பெயரில் நடைமுறைப் படுத்தப்படுவதாக நான் ஐயுறுகின்றேன். அந்த ஐயத்தைப் போக்கும் வரையில் என் வாழ்வுரிமையில் தலையிட இந்த அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது. எனவே நான் நாட்டுப்பிரிவினையை வரவேற்கிறேன்.