பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வேண்டும் விடுதலை

போலவே நமக்கும் நம் அறிவின் மேலும் நம்பிக்கையின் மேலும் வலிந்த இரும்புப் பிடி உண்டு. பிரிவினை என்ற சொல்லைச் சொல்லவும் அஞ்சுவதையும் அவ்வாறு அஞ்சுவதை 'அரசியல் விரகு' என்பதையும் நம்புகின்றவர்கள் மேலும் நம்பிக் கொண்டிருக்கட்டும், நம்பாமல் போகிறவர்கள் தனித்துப் போனால்தான் என்ன? கூட்டமாகப் போனால்தான் என்ன? இந்நிலையை இவர்கள் அணுகின்ற முறைக்கும், தமிழகத்தை இந்திராகாந்தி அணுகுகின்ற முறைக்கும் எள்ளளவும் வேறுபாடு இருப்பதாக நமக்குப் படவில்லை.

நமக்கு இரண்டில் ஒன்று தெரிய வேண்டும். ஆண்டாண்டுக் காலமாய் அடிமைப் பட்டுக் கிடக்கும் தமிழனுக்கு விடுதலை தேடித் தருவது யார். அல்லது எப்படி என்பதன்று - இப்பொழுதுள்ள சிக்கல், எப்பொழுது என்பதுதான், இப்பொழுதுள்ள கேள்வி. இந்நிலையில் நான் என்று வந்து எவரேனும் தலைமைப் பட்டயம் சாற்றிக் கொள்ளட்டும்; அல்லது தளபதிப்பட்டம் சூட்டிக் கொள்ளட்டும். நமக்குக் கலையில்லை. நமக்குள்ள கவலையெல்லாம், இந்தத் தலைமுறையிலேயே பெரியார் காலத்திலேயே நமக்கெல்லாம் மொழி உணர்வும் தமிழ் வரலாறும் ஊட்டிய பாவாணர் காலத்திலேயே நாம் விடுதலை பெற்றாக வேண்டும். அண்ணா தளபதியாக இருந்து முன் நடத்துவார் என்று நம்பியிருந்தோம். அண்ணா தம்மையே தாம் காத்துக் கொள்ள முடியாமல் தலை சாய்ந்தார். அவரின் தம்பிகளாகிலும் நம்மை வழி நடத்துவார்கள் என்று நம்பினோம். அவர்கள் தம் கைகளையும் கால்களையும் வலுப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாகத் தெரிகின்றது. அவர்கள் மேல் சாட்டப் பெற்ற அரசியல் குற்றச்சாட்டுகளுக்கிடையில், விடுதலை- பிரிவினை என்ற சொற்களைப் பலுக்குவதற்குக் கூட அவர்களுக்குத் திறமையிருக்குமோ? இருக்காதோ? நமக்கெல்லாம் உணர்வு கொளுத்திய பெரியாரோ கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தைப் பேசிப்பேசியே வீணடித்து விட்டதாக நாம் கருத வேண்டியுள்ளது. கத்தியை வைத்துக்கொள்; பயன்படுத்தாதே’ “-என்ற அவரின் அறநிலைப் போக்கிற்கு தர்மோபதேசத்திற்கு” எதிராளிகளில் எவனும் தலைசாய்த்ததாய்த் தெரியவில்லை. அவருடைய கட்டளை இன்று வரும் நாளை வரும் என்றெல்லாம் இனியும் ஏமாறிக் கொண்டிருப்பதற்கு நமக்கு அகவையில்லை; உடலும் உணர்வும் முதுமையுற்றுவிடும் போல் தெரிகின்றது. அதற்குப்பின்