பக்கம்:வேமனர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருந்ததி வசிட்டரின் மனைவி. ஒரு குறிக்கோள் துணைவி என மதிப்புடன் போற்றப் பெறுகின்றவள். தீண்டத்தகாத வகுப்பினைச் சேர்ந்தவர். அருந்ததி என்பது அதிகாலையில் தோன்றும் ஒரு நட்சத்திரமுமாகும்.

அலங்கார சாத்திரங்கள்: அணியியல் நூல்கள். எம். வின்டர்னிட்ஸ் கூறுகிறார்: "மிகப் பண்டுதொட்டே இந்தியாவில் 'அணியியல் ஓர் அறிவியல்போல் பேணி வளர்க்கப் பெற்றுள்ளது'. கவிஞர்கட்குத் துணையாக இருப்பதைவிட அவர்கட்குத் தடையாக இருக்கும் அளவுக்கு அது தீவிரமாகப் பேணி வளர்க்கப்பெற்றது.

ஆந்திரம்: ஆந்திரம், தெலுங்கு என்பன ஒரே பொருளையுடையவை. இவை மக்களையும், நிலப் பகுதியையும், மொழியையும் குறிக்கும். ஆந்திரர்கள் மிகப் பழங்குடி மக்கள்; இந்து சமயத்தின் மிகப் பெரிய பழங்கால நூலாகிய ஐத்திரேய பிராமணத்தில் இவர்கள் குறிப்பிடப் பெற்றுள்ளனர். இவர்களுடைய மொழி திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்திய யூனியனைச் சேர்ந்த பல மாநிலங்களில் ஆந்திரமும் ஒன்று, இஃது இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. இதன் பரப்பு 275, 280 சதுர கிலோ மீட்டர்கள். 1961 மக்கட் கணிப்புக் கணக்குப்படி இம்மாநிலத்தின் மக்கள் தொகை 35, 983,477 ஆகும்.

ஆந்திர சரஸ்வத பரிஷத்: இஃது ஒர் இலக்கிய ஆராய்ச்சி அமைப்பாகும். முதன் முதலாக 1911-ல் சென்னையில் தொடங்கப் பெற்றது; பின்னர் இதன் நூலகமும் அலுவலகமும் காக்கிநாடாவிற்கு மாற்றப் பெற்றன. மிகவும் வள்ளண்மை வாய்ந்த பித்தாபுரம் மாமன்னரான திரு ராவ் வேங்கட்ட கூர்ம மகிபதி சூர்ய ராவ் என்பவர் இதன் புரவலர்களுள் ஒருவராவர். இதன் நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஓலைச் சுவடிக் கையெழுத்துப் படிகள் உள்ளன.

இராமகவி, துரக: சிறந்த தெலுங்குக் கவிஞர். சினமூட்டப் பெற்றால் கீழான நிலைக்கு இறங்கக் கூடியவர். வசைபாடுவதில் வல்லவர். கி.பி. 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.

இராமர்: இராமாயணத்தின் கதைத் தலைவர். கோசல நாட்டின் பேரரசர் தசரதரின் மகன். விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் என்று கருதப் பெற்றுப் பல கோடி இந்துக்களால் பூசிக்கப் பெறுபவர்.

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/107&oldid=1256275" இலிருந்து மீள்விக்கப்பட்டது