பக்கம்:வேலின் வெற்றி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவன் நின்றாய். இந் நிலையில் போர் கருதி வந்த உன் ஊக்கம் போற்றுதற்குரியதே' என்று சொல்லி முடிக்கும் முன்னே, அறு முகப் பெருமான் குறுநகை செய்து, ஓர் அம்பை வில்லிற் பூட்டி விடுத்தார். அது சிங்கமுகன் மார்பிற்பட்டு ஊடுருவிச் சென்றது. அந் நிலையில் அறுமுகப் பெருமான் வீரவாகு முதலிய தம்பியரையும், பூதகணங்களையும் வருவிக்கத் திருவுளங்கொண்டு ஓர் அம்பினை ஏவினார். அது, பல கடல்களையும் கடந்து உதய கிரியை அடைந்தது; வீரரைப் பிணித்திருந்த மாயாபாசத்தைத் துணித்தது. கந்தன் திருவருளால் எல்லோரும் மயக்கம் தீர்ந்து எழுந்தார்கள். அப்போது அப் படைக்கலம் பிரமனுக்குரிய புட்பக விமானம்போல் அனைவரையும் தாங்கிக்கொண்டு, ஆகாய வழியே எழுந்து சென்றது. உதயகிரியை விட்டகன்று, எழுகடலும் கடந்து, போர்க்களத்தில் நின்ற முருகப்பெருமானது திருவடியில் வீரரை விடுத்து, அவர் துணியில் முன்போற் சென்று சேர்ந்தது. அப்போது வீரவாகுவும், நூறாயிரவரும், எட்டு வீரரும், அழிவற்ற பூதப்படை களும், கந்தவேள் திருவடியில் விழுந்து வணங்கினார்கள். கந்தவேளின் அம்பினால் அடியுண்டு விழுந்த சிங்கமுகன் மயக்கம் தெளிந்து எழுந்தான். தன் படைகளுள் ஒன்றையும் அவன் கண்டானில்லை; கந்தனே அவற்றைக் கொன்று ஒழித்தான் என்று உணர்ந்தான்; உள்ளம் கொதித்தான்; ஆயிரம் வில்லெடுத்துப் போர் புரிய நின்றான்; அட்டகாசம் செய்தான். அப்போது முருகவேள் ஈராயிரம் அம்புகளை விட்டு அவன் எறிந்த மலைகளைத் தகர்த் தார்; அகன்ற தோள்களை அறுத்தார். ஆயினும், அவை விழு வதற்கு முன்னே முளைத்து எழுந்தன. தவத்தினும் சிறந்ததொன்று இவ் வுலகில் உண்டோ? அந் நிலையில் நான்கு முகங்களையுடைய பிரமனும், தேவரும், பிறரும் அஞ்சி நடுங்க அறுமுகப் பெருமான் சற்றே உங்காரம் செய்தார். சிங்கமுகனிடம் தோன்றிய தலைகளும் தோள்களும் நடுங்கி ஒளித்தன. முருகன் அம்பால் அறுபட்ட தலையும் கையும் முன்போல் முளையாத தன்மையைக் கண்டான் சிங்கமுகன். பல நாள் ஒதியுணர்ந்த நூல்களையெல்லாம் பேசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/154&oldid=919729" இலிருந்து மீள்விக்கப்பட்டது