பக்கம்:வேலின் வெற்றி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 25 நொடிப்பொழுதில் உலகமெல்லாம் பரவிய இந் நெருப்பு, நின் திருவருளாற் குறுகி நின்றது. இதனை அடியேம் தாங்க வல்லமோ? இத் தீப்பொறிகளை நெருங்க நினைத்தாலும் எமது மனம் வெதும்புகின்றது; மேனி முழுதும் வியர்க்கின்றது. இவற்ற்ை எவ்வாறு சுமந்து செல்வோம்?" என்று கூறினார்கள். அது கேட்ட ஈசன், "இப் பொறிகளைத் தாங்கிக் கங்கையளவும் சென்றிட, உங்கள் இருவருக்கும் வேண்டிய வலிமை தருகின்றோம்" என்றருளினார். இருவரும் அப் பணியாற்ற இசைந்தனர். பின்னர், அங்கு நின்ற தேவர்களை நோக்கி, "இப் பொறிகள் சரவணப் பொய்கையை அடைந்து, ஒரு குழந்தையாய் வளர்ந்து, சூரன் குலத்தை அழித்து ஒழிக்கும். இனி நீங்கள் யாவரும் போகலாம்" என ஈசன் விடை கொடுத்தனுப்பினார். சிவபிரானுடைய திருவருள் முறைமையைக் கங்கை அறிந்து, தன்பால் வந்து சேர்ந்த பொறிகளைத் தலைமீது தாங்கிச் சென்று, ஒரு நாழிகையில் சரவணம் என்னும் பொய்கையிற் சேர்த்தாள். அங்கு அவை செந்தாமரை போல் விளங்கின. அருவமாகவும் உருவமாகவும், ஆதியாகவும் அநாதியாகவும், ஒன்றாகவும் பலவாகவும் நின்ற அரும் பெருஞ்சோதியே அனற்பிழம்பாகிய மேனியும் ஆறு முகமும் பன்னிரு கரமும் கொண்டு உலகம் உய்யுமாறு முருகனாகத் தோன்றிற்று. வேறு எவரிடமும் இன்றிச் சிவபெருமானிடம் அமைந்த ஆறு குணங்களும் உருவெடுத்தாற் போன்று, சரவணப் பூம்பொய்கையில் எழுந்தருளிய முருகன் மன்னுயிரைக் காத்தற்பொருட்டு ஆறு முகங்களைக் கொண் டருளினார். மறையாலும், வாக்காலும், மனத்தாலும் அளவிட இயலாது எங்கும் நிறைந்து விளங்கும் ஈசன், கருணை கூர்ந்து அறுமுக உருவாய்த் தோன்றிச் சரவணப் பொய்கையில் நறுமணங்கமழும் தாமரை மலரில் வீற்றிருந் தருளினார். வளமார்ந்த சரவணப் பொய்கையில், இதழ் நெருங்கிப் பூத்த தாமரை மலரில், சராசரங்களையெல்லாம் கர்த்தருளும் கருணைய ால், ஒப்பற்ற குமாரக் கடவுள் இளஞ் சிறு குழந்தைபோல இனிது அமர்ந்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/33&oldid=919820" இலிருந்து மீள்விக்கப்பட்டது