பக்கம்:வேலின் வெற்றி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 33 போந்தார்கள். சிவபெருமான் சேவடி பணிந்து மீண்ட வானவர் முதல்வனாகிய பிரமதேவனை முருகவேள் நோக்கி, "இங்கு எம் முன்னே வருக என்றழைத்தார். பிரமனும் முன்னே சென்று, முருகன் திருவடிகளில் விழுந்து வணங்காமல் அஞ்சலி செய்து நின்றான். அப்போது கந்தவேள் அவன் உள்ளத்தில் அமைந்த கர்வத்தை உணர்ந்து, போதனே! அமர்க!” என்று கூறி இருக்கச் செய்து, "நாள்தோறும் நீ என்ன தொழில் புரிகின்றாய்?" என்று வினவினார். "ஈசன் ஆணையால் எல்லாவற்றையும் படைத்தல் என் தொழில் என்று மறுமொழி கூறினான், பிரமன், அது கேட்ட முருகவேள், குறுநகை செய்து, "மண்ணிலும் விண்ணிலும் உள்ள உயிர்களை எல்லாம் படைத்தல் உன் தொழிலாயின், வேதம் முழுவதும் உனக்கு வருமோ? சொல்லுக" என்றார். அப்போது பிரமன், பிரணவத்தை முன்னே சொல்லி வேதத்தின் அடியெடுத்து ஓதத் தலைப்பட்டான். அது கண்ட முருகவேள், "நில்லு நில்லு: நீ முதலிற் சொல்லிய 'ஓம்' என்னும் சொல்லின் பொருள் கூறுக" எனப் பணித்தார். பிரணவத்தைத் தம் திருமுகங்களுள் ஒன்றாக உடைய முருகன் இவ்வாறு கூற, அதன் பொருள் அறியாத பிரம்மன் எட்டுக் கண்ணையும் வெறித்து விழித்தான்; வெட்கமுற் றான். விக்கினான் திகைத்தான் இருந்தான். பிரம்மன் ஞான வடிவாகிய பிரணவத்தை ஓதினவனே யன்றிப் பொருள் உணர்ந்தவன் அல்லன், ஈசன் அருள் பெற்று அதனை முன்னமே அறிந்தானில்லை. என் செய்வான்? மயங்கினான். அதன் பொருளை யாவ்ரே சொல்ல வல்லார்? மாசற்ற மறைகளுக்கெல்லாம் முதலிலும் முடிவிலும் ஓதப்படுவதாகிய ஒம் என்னும் ஓர் எழுத்தின் உண்மை யுணராது, மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய பிரமதேவன் மயங்கினான் என்றால், நாம் சிலவற்றை அறிந்துள்ளோம் என்பது நகையாடற்குரிய தன்றோ? கலை ஞானத்தால் அறிய முடியாத பிரணவத்தின் பொருளைக் கூறமாட்டாது மயங்கிய பிரமனை நோக்கி, "இதன் பொருள் உணர்ந்திலையே! இப்படித்தான் நீ படைப்புத் தொழில் செய்வதோ?’ என்று நான்கு தலைகளும் குலுங்க அவனைக் குட்டினார், குமாரவேள்; மேலும், அவன் மெய்யில் விலங்கு பூட்டிச் சிறைக்கோட்டத்தில் அடைப்பித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/41&oldid=919837" இலிருந்து மீள்விக்கப்பட்டது