பக்கம்:வேலின் வெற்றி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 59 சூரனைப் போல் நீங்கள் இறந்துபோக வேண்டா. உங்கள் தமையனை இப்பொழுதே வேள்வித் தீயினின்றும் எழுப்பித் தருவோம்! துயர் ஒழிக" என்று கூறிக் கங்கையை மனத்திலே கருதினார். கங்கை யாறு புறப்பட்டது; விண்ணுலகை யெல்லாம் விரைவிற் கடந்தது; நிலவுலகிற் போந்து ஈசன் திருவடியை வணங்கிற்று அவர் பணித்தவாறே ஓங்கி எரிந்த ஓம குண்டத்தின் இடையே பாய்ந்தது. அந் நிலையில் பாற்கடலினின்று எழுந்த ஆலகாலம் போல் அசுரர் தலைவனாகிய சூரன் ஆரவாரித்து எழுந்தான்; முன் போலவே தோன்றினான், சூரன். அவனைக் கண்ட சிங்கமுகனும் தாரகனும் பெருஞ்செல்வம் பெற்ற வறியவர் போல் மகிழ்வுற்றார். அளவிறந்த ஊற்றம் பெற்றார் விரைந்து ஒடி அவன் பாதம் பணிந்தார். துன்பம் ஒழிந்த தம்பியர் இருவரும் அருகே நிற்க, விரிந்த பெருஞ்சேனை வாழ்த்துரை வழங்க, சூரன் சிறந்து விளங்கினான். அவ் வேளையில், வேதியன்போல் நின்ற விமலன் மறைந்து, அன்னார் கருதிய சிவ வடிவத்திற் காட்சியளித்தார். ஈசனைப் போற்றிப் புகழ்ந்து நின்றான், சூரன். அப்போது அவன் முகம் பார்த்து, "நீ நம்மைக் குறித்து நெடுங்காலம் பெருவேள்வி செய்து இளைத்தாய்; உனக்கு என்ன வரம் வேண்டும்?" என வினவினார், சிவபெருமான். பிரமன் முதலிய வானவர் யாவரும் தம் பெருமை ஒழிந்த தென்று வருந்தி நிற்க, சூரன் கூறலுற்றான்: "திண்ணிய பிருதிவி பூதத்திலுள்ள புவனங்கள் பலவும் கொண்ட அண்டங்கள் அனைத்திற்கும் யான் அரசனாதல் வேண்டும்; அவற்றைக் காக்கும் ஆக்ஞா சக்கரமும் அருளல் வேண்டும் அண்டந்தோறும் செல்வதற்கு மனோ வேகமுடைய வாகனங்கள் வேண்டும்; என்றும் அழியாத உடலும் அளித்தல் வேண்டும்; பாற்கடலிற் கண்வளரும் பரந்தாமன் முதலியோர் போர் செய்தாலும் அன்னாரை வெல்லுதற்குரிய வெம்படைகள் வேண்டும்; அழிவின்றி என்றும் நான் வாழ வேண்டும்" எனக் சூரன் விண்ணப்பம் செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/67&oldid=919895" இலிருந்து மீள்விக்கப்பட்டது