பக்கம்:வைணமும் தமிழும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவ்யப் பிரபந்த இலக்கியப் பெருவிழா

115


இன்று திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்துர், ஆழ்வார்திருநகரி ஆகிய திருத்தலங்களில் இப்பெரிய இலக்கியத் திருநாள் சீருடனும் சிறப்புடனும் நடைபெற்று வருகின்றது. இத்திருநாளில் அரையர் சேவைதான் உயிராய நிகழ்ச்சியாகும். இத்திருநாள் மார்கழி மாதம் வளர்பிறையில் முதல் நாளான பிரதமையில் தொடங்கும் திருவரங்கத்தில் மட்டும் அதற்கு முந்தியநாளாகிய அமாவாசையன்று இரவில் திருநெடுந்தாண்டகச்சேவையுடன் தொடங்கும். இந்த விழாவைப்பற்றிச் சுருக்கமாக ஈண்டுத் தரப்பெறுகின்றது.[1]

இந்த இலக்கியப் பெருவிழா ‘திருமொழித் திருநாள்’ 'திருவாய்மொழித் திருநாள்' என்ற இரு பகுதிகளாக அமைகின்றது. திருமொழிகளையே கொண்ட முதல் ஈராயிரம் பாசுரங்களைப் பகற்பொழுதிலும், திருவாய்மொழி ஆயிரத்தை இராப்பொழுதிலும் சேவிப்பதால் இப்பகுதிகளை முறையே ‘பகல்பத்து’, ‘இராப்பத்து என்று வழங்குவர். கோயிலில் (திருவரங்கத்தில்) இவ்விழா நடைபெறும் முறை ஈண்டுத் தரப்பெறுகின்றது. மார்கழி அமாவாசையன்று இரவு அரையர்கள் பெருமாளுடைய கருவறைக்கு எழுந்தருளி பெருமாளுடைய அருளப்பாடும், வரிசையும் பெற்று தேவகானத்தில் 'மின்உருவாய்' என்ற திருநெடுந்தாண்டகத்தின் முதற்பாசுரத்தைத் தாளத்துடன் அநுசந்திப்பர். பெருமாளிடம் விடைபெற்று வெளிப்போந்து அப்பாசுரத்திற்கு அபிநயம் பிடித்து தம்பிரான்படி வியாக்கியானம் சேவிப்பர். திருநெடுந்


  1. விரிவாக அறிய வேண்டுவோர் இவ்வாசிரியரின் ‘ஆன்மிகமும் அறிவியலும் என்ற நூலில் (8வது கட்டுரை) காணலாம். (கழகத்தில் கிடைக்கும்).