பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

17

ஆர்வம் கொண்டிருந்தார். மரமேறுதல், தாண்டிக்குதித்தல், குதிரையேற்றம், குஸ்தி முதலிய முரட்டு விளையாட்டுக்களில் பயிற்சி பெற்றார். சில வேளைகளில் முரட்டுத்தனத்துக்காகத் தந்தையாரிடம் அடி வாங்கியதும் உண்டு. அடி வாங்கியும், மனம் மாறாத முரட்டு இளைஞராகவே அவர் வளர்ந்தார், இதனை அவர் தமது சுயசரிதையில் நகைச்சுவையோடு கூறுகிறார்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும், உலகநாத பிள்ளை தமது மகனுக்கு, தாலுகா ஆபீஸில் வேலை வாங்கித் தந்தார். தாலுகா அலுவலகக் குமாஸ்தாவுக்குப் பெரிய மதிப்பு இருந்த காலம் அது. ஏனெனில், அக்காலத்தில் இந்தியர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய வேலை தாசில்தார் வேலைதான். தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாக 18 வயதில் நுழைந்தால் 40 வயதில் தாசில்தாராகிவிடலாம். நடுத்தர வர்க்கத்தின் லட்சியம் ‘தாசில்’ வேலைக்குத் தமது மகன் வரவேண்டும் என்பதே. உலகநாதபிள்ளை தாசில் வேலை தன் மகனுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக உள்ளூரிலேயே, தாலுகா அலுவலகத்தில் வேலை வாங்கிக்கொடுத்தார். சிதம்பரம் பிள்ளைக்குப் பிரிட்டிஷ் சேவகம் பிடிக்கவில்லை. பைல்கள் நடுவே பூச்சி போல ஊர்ந்து நடத்தும் வாழ்க்கையை வெறுத்தார். தந்தையின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து ஓர் ஆண்டு போய் வந்தார். அலுவலகக் குமாஸ்தாக்கள், தாசில்தார், இவர்களுடைய அடிமை மனப்பான்மையை அவர் வெறுத்தார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தைப் போராடி வீழ்த்தவேண்டிய கடமையுடைய இளைஞர்கள், பிரிட்டிஷ் ஆட்சி நீடிக்க அவர்களது பணிநிலையங்களில் பணிபுரிவது அவருக்குக் கசந்தது. அவர் தமது தந்தையாரை, வழக்கறிஞர் தொழிலுக்குப் பயிற்சி பெறத் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்ப வேண்டிக்கொண்டார். தந்தையாரும் வழக்கறிஞராதலால், மகனுடைய வேண்டுகோளை மறுக்கவில்லை. உலகநாத பிள்ளை அவரைக் கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் என்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெற அனுப்பி வைத்தார். பயிற்சிக் காலம் முடிந்து தேர்வு எழுதிய பின்னர் ‘சன்னது’ என்ற அனுமதியளிக்கப்பட்டது. ஒட்டபிடாரத்தில் வழக்கறிஞராகப் பணிபுரியத் தொடங்கினார்.

வழக்கறிஞராகப் பணிபுரியும்பொழுது உயர்ந்த ஒழுக்க முறைகளை அவர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்தார். போலீசு அக்கிரமங்கள், பணக்காரர், ஏழைகளுக்குப் புரியும் அநீதிகள் ஆகியவற்றை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட ஏழை களுக்காக இவர் நீதிமன்றங்களில் வாதாடினார். ஏழை


34/2