பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வ.உ.சி.

களின் துண்டு நிலங்களைப் படைபலத்தால் ஆக்கிரமித்துக் கொள்ளும் ஜமீன்தார்கள், தங்கள் மனம்போல நடக்காத ஏழை எளிய விவசாயிகளை அடியாட்களால் தாக்கும் பணக்காரர்கள் ஆகியோர்மீது போலீசார் வழக்குத் தொடராத போது, அவர்களுக்காக, பணக்காரர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் பணியைச் சிதம்பரம்பிள்ளை செய்து வந்தார். சில சமயங்களில் தந்தை பணக்காரப் பிரதிவாதிக்கும், சிதம்பரம்பிள்ளை பணக்காரரால் ஏமாற்றப்பட்ட ஏழை வாதிக்கும் வாதாடியதுண்டு.

இந்த நடவடிக்கைகளால் பணக்காரர்களும் போலீசாரும் அவர் மீது வெறுப்புக் கொண்டார்கள். ஊழல் மலிந்த பிரிட்டிஷ் ஆட்சியின் போலீஸ் துறையினர் சிதம்பரம் பிள்ளையை ஏதாவது ஒரு வழக்கில் தொடர்புபடுத்தச் சமயம் பார்த்திருந்தனர். ஒரு தலைமைக் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில், சிதம்பரம் பிள்ளையைத் தொடர்புபடுத்தினர். அதனை விசாரித்த ஆங்கிலேய ஜாயின்ட் மாஜிஸ்டிரேட்டு, வழக்கில் எதிரிகள் அனைவரையும் விடுதலை செய்து, பொய் வழக்குப் போட்டதால், எதிரிகளுக்குச் செலவுத் தொகை கொடுக்கவும் தீர்ப்பளித்தார், வெள்ளை மாஜிஸ்டிரேட்டுகூடக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கத் துணியவில்லை, மூன்று சப்மாஜிஸ்டிரேட்டுகள் மீது லஞ்ச ஊழல், கடமை தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளைப் பொதுமக்கள் கொண்டு வந்தனர். சிதம்பரம் பிள்ளைதான் அஞ்சா நெஞ்சினர் என்ற நம்பிக்கையோடு அவரை அவர்கள் தங்களுக்காக வாதாட அழைத்தனர். தற்காலத்திலேயே அதிகாரிகள் மீது வழக்குக் கொண்டுவர மக்கள் அஞ்சுகிறார்கள். அதற்கு வாதாட வழக்கறிஞர்கள் முன்வருவதும் அரிது. ஆனால் 80 ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகளின் செல்வாக்கு அபரிமிதமாயிருந்தது. சிதம்பரம் பிள்ளை அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடியிருந்ததால், மக்கள் தம்பிக்கையைப் பெற்றிருந்தார். வழக்குகள் நடந்தன. மூன்று அதிகாரிகளில் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். இருவர் குமாஸ்தாக்களாகப் பதவிக் குறைப்புச் செய்யப்பட்டனர். இந்த வழக்குக் காரணமாக அதிகார வர்க்கம் முழுவதும் சிதம்பரம்பிள்ளை என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கியது. ஆயினும், அவர் மீது வெறுப்புக்கொண்டு ஏதாவது வழக்கில் மாட்டிவைக்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்த போலீசாரோடு சேர்த்து அவரது கழுத்தை நெரிக்கக் காத்திருந்தனர். திறமைமிக்க தைரியமுள்ள வக்கீல் என்ற புகழ் பரவியதால் அவரது தொழில்முறை நடவடிக்கைகள் அதிகமாயின.